மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

வாட்ஸ் ஆப் குழு தொடங்கிய ஸ்மார்ட் வகுப்பு!

 வாட்ஸ் ஆப் குழு தொடங்கிய ஸ்மார்ட் வகுப்பு!

வாட்ஸ் ஆப் மூலம் இணைந்த நண்பர்கள், உடுமலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கியுள்ளனர்.

வாட்ஸ் ஆப் மூலம் ஒரு குழுவை தொடங்கி இயலாதவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்தக் குழுவில் 70 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் உள்ளவர்களில் பலருக்கும் பலரது முகம் தெரியாது. பேசியதும் இல்லை.

இதுவரை ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து சமூக சேவை செய்துவருகின்றனர். குழுவில் உள்ள நண்பர்கள் மூலம், என்ன உதவி, யாருக்கு என்பதைப் பதிவிட்ட பின், அக்குழு உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று, விசாரிக்கின்றனர். அதன்பின், தொகையாகவோ அல்லது அவர்களுக்குத் தேவையானதையோ செய்து தருகின்றனர் இந்த வாட்ஸ் ஆப் குழு நண்பர்கள்.

அந்தவகையில் தான் உடுமலை அருகே உள்ள வெஞ்சமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பு கிடைத்துள்ளது. சிறப்பான ஆசிரியர்கள், திறமையுள்ள குழந்தைகள் இருந்தும், அவர்களுக்கான தொழில்நுட்ப வசதி போதிய அளவில் இல்லை என, குழு நண்பர் ஒருவரால் பதிவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப் குழுவினர் நேரடியாகப் பள்ளிக்கு சென்று விசாரித்து ஸ்மார்ட் வகுப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

தற்போது, பணிகள் முழுமையாக நிறைவடைந்து ஸ்மார்ட் வகுப்பு தொடக்க விழா நேற்று (நவம்பர் 22) நடந்தது. குழு அட்மின், பாபு சபாபதி மற்றும் உறுப்பினர்கள் தொடங்கிவைத்தனர். இந்த விழாவில் கல்வி அதிகாரிகளும் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

சமூக வலைத்தளத்தை சரியான வழியில் பயன்படுத்தினால், புதிய மாற்றத்தை உருவாக்கலாம் என, செயல்பட்டு வருகிற 'நாட்டாம தீரப்ப மாத்து' என்ற வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள அனைவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon