மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

கைரேகையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்!

கைரேகையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்!

ஜெயலலிதா மரணம் குறித்து சென்னை எழிலகத்தில் நடைபெற்றுவரும் இரண்டாம் நாள் விசாரணையில், "ஜெயலலிதாவின் கைரேகையை தடய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்" என்று மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், நேற்றிலிருந்து தனது விசாரணையைத் துவக்கியுள்ளது. திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன், தீபா, அவரது கணவர் மாதவன் உள்ளிட்ட பலர் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற முதல் நாள் விசாரணையில், உரிய ஆதாரங்களுடன் ஆஜரான மருத்துவர் சரவணன் ஆணையர் ஆறுமுகசாமி முன்பு விளக்கமளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சரவணன், "உயிரோடு உள்ள ஒருவரின் கைரேகை வரிவரியாக இருக்கும். ஆனால் ஜெயலலிதாவின் கைரேகையில் எந்த வரியும் இல்லை. இறந்தவரின் கைரேகையில்தான் வரிகள் இருக்காது. எனவே,ஜெயலலிதா இறந்த பின்பே அந்தக் கைரேகை எடுக்கப்பட்டுள்ளது" என்ற சந்தேகத்தை எழுப்பினார்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ( நவம்பர் 23) விசாரணைக்கு ஆஜரான மருத்துவர் சரவணன், ஜெயலலிதா மரணம் குறித்த கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதாவை நலம் விசாரித்த கவர்னருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கையெழுத்திட்டு அனுப்பியதாகக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். அந்தக் கையெழுத்து முறைகேடானது என்று நாங்கள் சொல்கிறோம். எனவே இந்தக் கையெழுத்தையும், கைரேகையையும் உரிய தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆணையத்திடம் கோரியுள்ளோம். தக்க சமயத்தில் அதனை செய்வோம் என்று நீதிபதி உறுதியளித்துள்ளார்.

இதுதவிர தனிப்பட்ட முறையில் ஓய்வுபெற்ற, கைரேகை துறையில் நிபுணத்துவம் பெற்ற டிஎஸ்பி ஒருவரை வைத்து ஜெயலலிதாவின் கைரேகையையும், கையெழுத்தையும் ஆய்வு செய்துள்ளோம். கைரேகையில் தவறு உள்ளது என்று அவர் உறுதியளித்துள்ளார். அவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். என்னிடம் நடைபெற்ற விசாரணை இன்றுடன் முடிந்துவிட்டது, தேவைப்பட்டால் திரும்ப அழைப்பேன் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்த அவர், "கடிதம் எழுதிய தினத்தில் ஜெயலலிதா வென்டிலேட்டர் கருவியில் சுவாசம் அளிக்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் இருந்திருக்கிறார்" என்ற சந்தேகத்தையும் எழுப்பினார்.

தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக இரு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்களது பெயர் வெளியிடப்படவில்லை, இதையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயண பாபு, மருத்துவர் மயில்வாகனன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon