மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

தீரனைப் பாராட்டிய போஸ் வெங்கட்

தீரனைப் பாராட்டிய போஸ் வெங்கட்

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் போஸ் வெங்கட், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் தனக்கு நல்ல அடையாளத்தை தந்திருப்பதாக கூறியுள்ளார்.

போஸ்வெங்கட் சாமானியனாகச் சினிமாவுக்குள் நுழைந்து தன் பெயரை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர். அவரது திறமையை உணர்ந்து பாரதிராஜா, சங்கர், கே.வி.ஆனந்த், சுந்தர்.சி, பிரபுசாலமன் உட்பட பல இயக்குநர்களும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். சமீபத்திய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அவருக்கு மேலும் புகழைச் சேர்த்திருக்கிறது, பத்திரிகைகளும் விமர்சகர்களும் அவரது கதாபாத்திரத்தை வெகுவாக பாராட்டி வருகின்றன.

படம் குறித்து போஸ்வெங்கட் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் , “இந்த நேரத்தில் இயக்குநர் வினோத்துக்கும், நாயகன் கார்த்திக்கும் என்னுடைய நன்றிகள். சிவாஜி, தலைநகரம், சிங்கம், கோ, கவண் என்று பரவலாக கவனிக்கப்படும் நடிகராக நான் இருந்தாலும், தீரன் எனக்கு ஒரு தனி அடையாளத்தை தந்திருக்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நான் போலீஸாக நடித்திருக்கிறேன். அவை அனைத்திலிருந்தும் முற்றிலுமாக வேறுபட்டவன் தீரன் சத்யா. நிஜப் போலீஸின் மேனரிசம், அவர்களது அன்றாட பிரச்சினைகள், குடும்பத்துடனான உறவு என்று இயல்பான போலீஸ்காரர் போலவே நடித்திருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள். விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

“இந்த வெற்றிக்கு இயக்குநரோடு சேர்த்து மற்றுமொரு முக்கிய காரணம் கார்த்தி. கொளுத்தும் வெயில், உதடுகள் பிழக்கும் ராஜஸ்தான் பாலைவன சூழல் இடையே இன்னொரு புழுதிப் புயல் போல, கதாபாத்திரத்துக்குள் முழுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தார் கார்த்தி. அவருடன் சேர்ந்து நிற்கையில் தானாகவே ஒட்டிக் கொண்டது அவரது எனர்ஜி. ஏற்கனவே சிங்கத்தில் சூர்யாவுடனும் நடித்த அனுபவம் உண்டு. சூர்யா புல் பாட்டில் விஸ்கி என்றால், கார்த்தி காக்டெயில் மிக்ஸ். இருவரும் எனர்ஜி பூஸ்டர்கள்” என சூர்யா கார்த்தி இருவருக்குமான வேறுபாட்டினை தெரிவித்துள்ளார்.

தீரனைத் தொடர்ந்து சுசீந்திரன், பிரபுசாலமன் ஆகியோர் தற்போது இயக்கிவரும் படங்களில் கதையின் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் போஸ் வெங்கட்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon