மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

உயரும் சர்க்கரை உற்பத்தி: ஆலைகள் கோரிக்கை!

உயரும் சர்க்கரை உற்பத்தி: ஆலைகள் கோரிக்கை!

நடப்புப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி, அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இருப்பு வைப்பதற்கான வரையறைகளைத் தளர்த்த மத்திய அரசுக்கு இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை சர்க்கரையை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’அதிக உற்பத்தி மற்றும் இருப்பு வைக்க விதிக்கப்பட்ட வரையறைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள 313 சர்க்கரை ஆலைகளில், நடப்பு பருவத்தில் (2017 அக்டோபர் முதல் 2018 செப்டம்பர் வரை) முதல் 45 நாட்களில் 13.73 லட்சம் டன் அளவிலான சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முந்தைய பருவத்தில் 222 ஆலைகள் இணைந்து மொத்தம் 7.67 லட்சம் டன் அளவிலான சர்க்கரையை உற்பத்தி செய்திருந்தன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்புப் பருவத்தில் சற்று முன்னரே சர்க்கரை உற்பத்தி தொடங்கி விட்டது. உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி இதுவரையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1.93 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்திருந்த உத்தரப் பிரதேச ஆலைகள், இந்த ஆண்டின் இதுவரையிலான காலகட்டத்தில் 5.67 லட்சம் டன் அளவிலான சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளன. அதேபோல, கடந்த ஆண்டு 1.92 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்திருந்த மகாராஷ்டிர ஆலைகள், இந்த ஆண்டில் 3.26 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்திருக்கின்றன. 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை சர்க்கரை விலை சீராகவே இருந்தது. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3600 வரை விற்பனையான சர்க்கரை விலை, தற்போது ரூ.100 முதல் ரூ.200 வரை விலை குறைந்துள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon