மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

திமுக போராட்டம்: தமிழகம் முழுவதும் தாக்கம்!

திமுக போராட்டம்: தமிழகம் முழுவதும் தாக்கம்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, நேற்று (நவம்பர் 22) தமிழகத்தில் உள்ள 35,475 நியாய விலைக் கடைகள் முன்பு திமுகவினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. திமுகவின் கட்சி அமைப்பும் தொண்டர்களின் செயல்திறனும் வலுவாக இருப்பதை இந்த வெற்றி உணர்த்தியிருக்கிறது.

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்தும், அத்தியாவசியமான குடிமைப் பொருள்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் முன்பும் நவம்பர் 22ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்ததை, நமது மின்னம்பலம்.காமில் நவம்பர் 20 அன்று மாலை 7.00 மணிச் செய்தியில் வெளியிட்டிருந்தோம்.

அதன்படி, நேற்று நியாய விலைக் கடைகள் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகம் முழுவதும், 32 மாவட்டங்களில், 12,534 ஊராட்சி, 385 ஊராட்சி ஒன்றியம், 525 பேரூராட்சி, 125 நகராட்சி, 12 மாநகராட்சிகளில் உள்ள, 35,475 நியாய விலைக் கடைகள் முன்பு, திமுகவினருடன் பொதுமக்களும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், நியாய விலைக் கடைகள் மூடப்பட்டன.

ஒரு கடைக்குச் சராசரியாக நூறு பேர் என்றால்கூட, சுமார் முப்பத்தி ஐந்து லட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து ஐந்நூறு பேர் கலந்துகொண்டதையும் நேற்று மதியம் திமுக போராட்டம்: ரேஷன் கடைகள் மூடல்! எனப் பதிவு செய்திருந்தோம்.

மக்களும் இணைந்த போராட்டம்

ஒவ்வொரு கடையிலும் திமுகவினரும் அவர்களுக்கு ஆதரவாகப் பொதுமக்களும் திரண்டது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தின் வலிமையையும் மக்கள் மனநிலையையும் பற்றி திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் கேட்க முடிந்தது.

திருச்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் உணவுத் துறை அமைச்சருமான நேரு, உறையூர் பாண்டமங்களத்தில் உள்ள ரேஷன் கடை எதிரில் பெரும் மக்கள் திரண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். “நான் உணவுத் துறை அமைச்சராக இருந்தவன். உணவுத் துறையும் கூட்டுறவுத் துறையும் ஏழை எளிய மக்களைப் பாதுகாப்பது. தலைவர் கலைஞர் காலையில் தூங்கியெழுந்து, மக்கள் பிரச்னைகள் பற்றிக் கேட்டு ஒவ்வொரு துறையிலும் என்ன குறையிருக்கு என்று கேட்டு மக்களுக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்வார். திமுக ஆட்சியில் நியாய விலைக் கடையில் குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் கிடைத்தது, மாதத்தில் முப்பது நாள்களிலும் பொருள்கள் வாங்கலாம்” என்று நினைவுகூர்ந்தார்.

“இந்த ஆட்சியில் கடையைத் திறப்பதில்லை, திறந்தாலும் மக்களுக்கு வழங்குவதற்குப் பொருள்கள் இல்லை. கிராமத்தில் உழைக்கும் மக்கள், தாய் சேய்கள் பசும்பால் குடிக்க முடியாமல் சர்க்கரை விலையை உயர்த்திவிட்டார்கள். திமுக ஆட்சியில் அரசே நெல் கொள்முதல் செய்துவந்தது, இந்த ஆட்சியில் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டு, அரிசியைக் கெஞ்சிக் கேட்டு வாங்குகிறார்கள். மாநில உரிமையை முழுவதும் விட்டுக்கொடுத்து வருகிறார்கள். ஆளத் தெரியாத ஆளுங்கட்சியான மக்கள் விரோதமான, தலைமையில்லாத ஆட்சி” என்றார் காட்டமாக.

சீர்கெட்டிருக்கும் ஆட்சிக்கு ஓர் உதாரணம்

மேலும், “அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளுந்து கொள்முதல் செய்யத் தேவையில்லை என்கிறார். இன்னொரு அமைச்சர் காமராஜ், உளுந்து கொள்முதல் செய்வோம்” என்கிறார் என்று அமைச்சர்களை விமர்சித்த நேரு, “இவர்களுக்கு மரண அடி கொடுப்பதற்கான காலத்தை எதிர்நோக்கி மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

காவு கொடுக்கும் அரசு

“இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் எழுச்சியைப் பறைசாற்றியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்களே முன்வந்து கலந்துகொண்டு ஆளுங்கட்சியினரை வறுத்தெடுக்கிறார்கள். ஆளும்கட்சி மீது மக்கள் கடுமையான கோபத்திலிருப்பதை உணர முடிந்தது” என்றார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, திமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்த திருவண்ணாமலை திமுக மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஏ.வ.வேலு.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவுமான சேகர் பாபு, “நியாய விலைக் கடைகள் முன்பு தமிழகம் முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், ஆண்கள் ஏன், அதிமுகவினர்களே பலர் கலந்துகொண்டார்கள்” என்றார் மிகுந்த உற்சாகத்தோடு.

“கடந்த ஆண்டும், உளுந்து கொள்முதல் செய்யாமலிருந்தார்கள். திமுக செயல் தலைவர் குரல் கொடுத்த பிறகுதான், டெண்டர் விட்டு நியாய விலைக் கடைகளுக்கு சப்ளை செய்தார்கள். இந்த வருடம் பிப்ரவரி மாதம் உளுந்து கொள்முதல் செய்வதற்குத் தவறிவிட்டார்கள். நியாய விலைக் கடைகளில் எந்தப்பொருள் கேட்டாலும் இல்லை என்ற பதில் தவிர வேறு பதிலை எதிர்பார்க்க முடியவில்லை. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமான அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக் கடைகளுக்கு வினியோகம் செய்யாமல் காவுகொடுத்தவர்கள், மாநில உரிமைகளையும் மத்திய அரசுக்குக் காவு கொடுத்துவருகிறார்கள். மக்கள் விரோத ஆட்சி, எப்போது அகற்றப்படும் என்று எதிர்பார்ப்பிலிருக்கிறார்கள் தமிழக மக்கள்” என்று ஆளுங்கட்சியை ஒரு பிடிபிடித்தார்.

“திமுக தலைவர் கருணாநிதி, மக்கள் வாழ்வாதாரமான கூட்டுறவுத் துறையும் நியாய விலைக் கடையும் பாதுகாத்து வந்தார். அவற்றை அடியோடு அழித்து மூடுவிழா செய்துவருகிறார்கள் இவர்கள்” என்றவர், மேலும், “ஆளும்கட்சியினர் நியாய விலைக் கடைகளைக் கை விடுகிறார்கள்; மக்கள் அதிமுகவைக் கைவிடுகிறார்கள்” என்றார் முத்தாய்ப்பாக.

ஒட்டுமொத்த தமிழகத்திலும் திமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த உற்சாகமும் செயலூக்கமும் திமுகவின் கட்டமைப்பு கட்டுக்குலையாமல் இருப்பதைக் காட்டுகின்றன. மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டது நியாய விலைக் கடைகளின் முக்கியத்துவத்தையும் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியையும் காட்டுவதாக அமைந்திருந்தது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon