மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ஒரே நேரத்தில் இரு அணியினரும் பேரணி!

ஒரே நேரத்தில் இரு அணியினரும் பேரணி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தன்று, அதிமுகவின் இரு அணியினரும் சென்னை அண்ணா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் செல்வதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளதை முன்னிட்டு அதிமுகவின் இரு அணிகளும் நினைவு நாள் நிகழ்வுக்குத் தயாராகிவருகின்றன.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டிருந்த அறிக்கையில், “டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை மவுன ஊர்வலம் சென்று மெரினாவிலுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்க உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனுமதி கேட்டு தினகரன் ஆதரவாளர் வி.பி.கலைராஜன் சென்னை மாநகர ஆணையரிடம் மனுவும் அளித்துள்ளார்.

தொடர்ந்து ஒருங்கிணைந்த எடப்பாடி-பன்னீர் அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து காலை 9.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது. முதல்வர் - துணை முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் தொண்டர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், ஒரே இடத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கும் என்று இரு அணியினரும் அறிவித்துள்ள நிலையில், இரு அணியினரும் தங்களுடைய பலத்தைக் காட்டுவதற்கு அதிகளவில் தொண்டர்களைத் திரட்ட உள்ளனர். எனவே, இரு அணியில் ஒருவருக்கே பேரணி நடத்த அனுமதி வழங்கப்படலாம். அரசு நிர்வாகம் எடப்பாடி தரப்பில் உள்ள நிலையில், தினகரன் அணியினருக்கு பேரணி செல்வதற்குக் காவல் துறை அனுமதிக்காத நிலை ஏற்படும். எனவே, முன்பு பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வாங்கியது போல, தினகரன் தரப்பிலிருந்து நீதிமன்றத்தை அணுகி அனுமதி வாங்கியும் பேரணி நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளின் தொண்டர்களும் அதிகளவில் திரளக் கூடிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளதால் அமைதிப் பேரணி, அமைதியான முறையில் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையிலுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இரு அணியினரும் ஒரே நேரத்தில் மாலை அணிவிக்க அனுமதி கோரியதால், அன்றைய தினத்தில் புதுக்கோட்டை நகரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon