மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

சினிமா வட்டி: பேராசைப் பூனைக்கு மணிகட்டிய நடிகர்கள் சங்கம்!

சினிமா வட்டி: பேராசைப் பூனைக்கு மணிகட்டிய நடிகர்கள் சங்கம்!

சசிகுமாரின் மைத்துனரும் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளருமான அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதால், சினிமாவில் நிலவும் கந்து வட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரியளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த அழுத்தத்தின் காரணமாகத் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

அசோக் குமாரின் கடிதத்தில் இடம்பெற்றிருந்த அன்புச்செழியனின் பெயரினால் அவர் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். சிறப்பு தனிப்படையால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நிலையில், அவர் சார்ந்த கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில்...

இன்றைய நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகளில் திரு. அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டு, அவர் ஒரு கடிதம் எழுதி வைத்ததாகவும் அதில் சில வார்த்தைகள் எழுதி வைத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. அசோக் குமார் என்பவர் எழுதி வைத்ததாக சொல்லப்படும் கடிதம் அவர் எழுதி வைத்தது தானா? அசோக் குமார் என்பவர் திரு. சசிகுமார் அவர்களின் உதவியாளர். நாங்கள் அசோக்குமார் என்பவருக்கு எந்த பண வரவு செலவும் செய்யவில்லை. படம் தயாரிப்பதற்கு சசிகுமார் அவர்கள் தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்த வித வியாபாரத் தொடர்பும் இல்லாத அசோக் குமார் எங்களைக் கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. எங்களிடம் பண உதவி பெற்று படம் தயாரிக்கிறார்கள். அதை படம் ரிலீஸ் செய்யும்போது செட்டில் செய்வார்கள். இதுதான் சினிமா நடைமுறை. எந்த முதலீடும் இல்லாமல் சிலர் படம் தயாரிப்பதாக வருகிறார்கள். எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பி பணம் தருகிறோம். இவர்கள் ஒரு படத்துக்குப் பலரிடம் பணம் வாங்குகிறார்கள். ஆனால், இவர்கள் படம் தயாரிக்காமல் வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள் இப்படி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாகத் தெரிகிறது. நாங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்தப் புகாரும் கிடையாது.

மேற்படி அசோக் குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேற்கண்ட அறிவிப்பை அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவன மேலாளர் முரளி வெளியிட்டிருந்தார். இந்தக் கடிதம் வெளியான சில மணிநேரத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டது. அதில்...

“அமரர் அசோக் அவர்களை (கம்பெனி புரொடக்ஷன்ஸ் அலுவலக நிர்வாகி) இழந்து, ஆற்ற முடியா துயரில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர் சசிகுமாருக்கும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒரு பக்கம் சர்வதேச விருதுகள், மறுபக்கம் மன அழுத்தத்தால் மரணம். நாம் எங்கிருக்கிறோம்; எதை நோக்கிப் பயணிக்கிறோம்; இலக்கு என்ன; எதை மறைத்து எதை வெளிப்படுத்துகிறோம்; யாருக்காக படைப்புகள்; எது படைப்பு; படைப்பில் பணம் எப்படி பந்தயமாகிறது; பந்தயத்தில் பலன் பெறுவோர் யார்; பலியாவதோ யார் என இன்னமும் பல கேள்விகள் தொடர் சங்கிலியாய் நீண்டு போகிறது.

மரத்துப்போன நம் மனதை உலுக்கியெழுப்பி மறைந்த அசோக்கின் பொருட்டு மறைவாகவும், இலைமறை காயாகவும் இருக்கும் வியாபார வழக்கங்களை விட்டொழிப்போம். அசோக்கின் முடிவு திரைப்படத்துறைக்கு கேள்வியை வித்திட்டுச் சென்றிருக்கிறது. திரைப்படத்துறை தன்னை சுய ஆய்வு செய்துகொள்வதற்கான அபாய எச்சரிக்கையாகவே அசோக்கின் மறைவு மணியடித்திருக்கிறது. வெற்றிகளையும் லாபங்களையும் மட்டுமே கணக்கிலெடுத்துக்கொள்ளும் இத்துறை இனி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் தீர கலந்தாலோசித்து முன்னேற வேண்டியதாயிருக்கிறது. கலைஞர்களாகட்டும், தொழில் நுட்பங்களாகட்டும், முதலீட்டாளர்களாகட்டும் ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கழுத்தை இறுக்குவது தவிர்த்து, கைகோத்து இணைவது இன்னும் வலுப்பெறும். எந்த ஒரு வியாபாரத்திலும் வெற்றியும் லாபமும் முக்கியமென்றாலும் மனிதாபிமானத்தை கைவிட்டு அணுகுவது அசோக்கின் முடிவுக்குத்தான் இட்டுச் செல்லும்.

தவறிழைத்தோரை சட்டம் தீவிரமான தண்டனை பெறச் செய்யட்டும். அது இனி அதீத வட்டி வாங்குவோருக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும். நாம் நமக்காக புதுக்கடமைகளை வகுத்தெடுப்போம். கணக்கு வழக்குகள் போன்ற வழக்கங்களை நடைமுறைக்கு கொண்டு வருவோம். விஞ்ஞானம் ஓங்கி நிற்கும் இக்காலகட்டத்தில் கற்கால கட்டப் பஞ்சாயத்துகளையும், அதீத வட்டி முறைகளையும் தீக்கிரையாக்குவோம். நெறிப்படுத்தப்பட்ட யாருக்கும் அழுத்தம் தரா பயனுறும் பொருளாதாரத் திட்டங்களை வகுப்போம். யாராவது மரணிக்கும்போது மட்டும், கண்ணீர் விட்டும், காது கிழிய கத்தியும் உணர்வுகளை வடித்துவிட்டு மீண்டும் பழைய தண்டவாளத்துக்கே ஏறாமல், அறிவுரீதியாக அணுகி நடைமுறை மாற்றுவோம், ஒன்றுகூடி தேரிழுப்போம், ஒன்றாய் குடும்பமாய் மகிழ்வோம்.

இந்தச் சூழலில் திரைப்படத் துறையின் நல்ல எதிர்காலத்துக்காக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்குத் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தோள் கொடுத்து நிற்கும்.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர்

நாசர்.”

கோபுரம் ஃபிலிம்ஸின் அறிவிப்புக்கு யாரும் எந்த பதிலும் கூறாத நிலையில் நடிகர்கள் சங்கம் வெளியிட்ட மேற்படி கடிதமே பதிலாக அமைந்துவிட்டது. தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களிடையே இல்லாத வெளிப்படைத் தன்மையே இப்படியான பிரச்சினைகள் பெருமளவில் ஏற்பட காரணமாக இருக்கிறது. படத்துக்கு எவ்வளவு பட்ஜெட், அதற்கு எவ்வளவு பணம் எங்கிருந்து வாங்கப்பட்டது போன்ற தகவல்களை பெரும்பான்மை தயாரிப்பாளர்கள் பதிவு செய்வதில்லை. இதுபோன்ற டேபிளுக்கு அடியில் செய்யப்படும் வேலையினால்தான் அதிகப் பணத்தை வட்டிக்கு வாங்கிவிட்டு, இப்படி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon