மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

சிறப்புப் பார்வை: இணையம் மூலம் ஆணுறை விநியோகம் வெற்றியடைவது ஏன்?

சிறப்புப் பார்வை: இணையம் மூலம் ஆணுறை விநியோகம் வெற்றியடைவது ஏன்?

மேனகா ராவ்

இந்தியா முழுவதும் எய்ட்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேஷன் (AIDS Healthcare Foundation) என்ற தன்னார்வ அமைப்பு, இந்துஸ்தான் லேட்டெக்ஸ் லிமிடெட் (HLL) நிறுவனத்துடன் இணைந்து ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் இலவச ஆணுறைகளை விநியோகிக்கத் தொடங்கியது. இதில் 69 நாள்களில் 10 லட்சம் இலவச ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களைத் தடுப்பதற்காக, எய்ட்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேஷன் அமைப்பு கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, இந்தியாவில் இலவச ஆணுறை விநியோகத்தைத் தொடங்கியது.

இதற்காக 1800 102 8102 என்ற இலவச எண்ணிலோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ இலவச ஆணுறைகளுக்கு ஆர்டர் செய்யலாம் என்றும் அந்த அமைப்பு அறிவித்தது.

இது தொடர்பாக எய்ட்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேஷன் கொடுத்துள்ள தகவலில், “எச்.ஐ.வி. தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலாதாரங்களில் ஒன்று ஆணுறைகளைப் பயன்படுத்துவது. எச்.ஐ.வி பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோருக்கு அதிகமான ஆபத்து ஏற்படுவதால், ஆணுறைகளை வழங்கிவருகிறோம். அதேபோல், அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள வைரஸ் தடுப்பு சிகிச்சை மையங்களில் கருத்தடைச் சாதனங்களை NACO தொழிலாளர்கள் விநியோகிக்கின்றனர். இதுதவிர, பல்வேறு கடைகளில், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆன்லைன் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் இலவச ஆணுறைகள் பெறும் வசதி உள்ளது.

இதுகுறித்து 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் NACO வெளியிட்டுள்ள இடைக்கால மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 200 முதல் 220 கோடி ஆணுறைகள் விற்பனையாகின்றன. ஆனால், 2014 -15ஆம் ஆண்டில் 88 கோடி ஆணுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 2015 -16ஆம் ஆண்டில் 20.90 கோடி மட்டுமே விநியோகிக்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆணுறை பயன்பாட்டின் நன்மை குறித்து 77 சதவிகித ஆண்களும், 54 சதவிகித பெண்களும் மட்டுமே விழிப்புணர்வு கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க விநியோகிக்கப்பட்டது. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகள் தனிநபர்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டன.

டிசம்பர் மாதம் வரை நீடிக்கவிருந்த இந்தத் திட்டம், ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலேயே அதாவது இந்தச் சேவை தொடங்கப்பட்டு 69 நாள்களிலேயே 10 லட்சம் ஆணுறைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதையடுத்து மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் 20 லட்சம் ஆணுறைகளைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் ஆன்லைனில் ஆர்டர் வந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் 50 லட்சம் ஆணுறைகளை ஆர்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆன்லைன் மூலமாக ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது. “பெரும்பாலான இந்தியர்கள் பாலியல் தொடர்பான பொருள்களைக் கடைகளுக்குச் சென்று வாங்க விரும்புவதில்லை. அவர்கள் வெட்கப்படுகின்றனர். பாலியல் பொருள்களைக் கடைக்காரரிடம் சொல்லி வாங்குவதற்குக் கூச்சப்படுகின்றனர். ஆன்லைனில் ஒருவர் ஆர்டர் செய்தால் அந்தப் பெட்டிக்குள் என்ன பொருள் இருக்கும் என்பது, அதனை கொண்டு வருவோருக்கும் தெரியாது. இதனால் ஆன்லைனில் பாலியல் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது” என்கிறார் எய்ட்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேஷனின் இயக்குநர் டாக்டர் சாம் பிரசாத்.

கடந்த காலத்தில் ஆணுறைகளை வழங்குவது அத்தியாவசியமான ஒன்றாகக் கருதப்பட்டது. Naco மற்றும் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் ஆகிய இரண்டு பொது சுகாதாரத் திட்டங்கள் மூலம் ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அரசாங்க சுகாதார மையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஊழியர்கள் மூலமாகவும் ஆணுறைகள் விநியோகிக்கப்படுகின்றன. அதேபோல், ஜெய்ப்பூரில் உள்ள வீட்டு வசதித் திட்டத்திலும் ஆணுறைகளை வழங்கும் முறை இருக்கிறது.

தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வறிக்கையின்படி 2005-06 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது திருமணமான பெண்கள் கருத்தடைச் சாதனங்கள் பயன்படுத்துவது 5.2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ASHAவில் உள்ளவர்கள் பெண்கள் என்பதால், அவர்கள் ஓர் ஆணிடம் சென்று ஆணுறை பயன்படுத்துமாறு கூறத் தயங்குவது தெரியவந்துள்ளது. அவர்களிடம் ஆணுறை பெற மக்களும் வெட்கப்படுகின்றனர்.

“இந்தியாவில் பாலியல் குறித்து இன்னும் பல விஷயங்கள் மூடுமந்திரமாகவே இருப்பதால், ஆன்லைன் மூலம் கிடைக்கும் இலவச ஆணுறைகளைப் பயன்படுத்துவது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கிறது. ஓர் ஆணோ அல்லது பெண்ணோ நேரடியாகக் கடைக்கு சென்று ஆணுறை வாங்க விரும்புவதில்லை. இதனால் தங்களுடைய மதிப்பு பொது இடங்களில் குறைந்துவிடும் என்ற கவலை ஏற்படுகிறது. அவர்கள் வெட்கப்படுகின்றனர்” என்கிறார் பிரசாத்.

எனினும், ஒரு சிலர் மட்டுமே ஆன்லைனில் வாங்குகின்றனர். கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் இவ்வாறு வாங்குவதற்கு வாய்ப்பில்லை. இதற்காகச் சுகாதார ஊழியர்களைக் கிராமப்புறங்களில் உள்ள மக்களை சந்திக்கச் செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

ஆணுறைகளை விநியோகிக்கும் சில நிறுவனங்கள் தங்கள் விநியோகத்தை அதிகரிக்க ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் NACO என்ற அமைப்பைத் தொடர்புகொண்ட பல்வேறு அமைப்புகள் ஒரு லட்சம் ஆணுறைகளைக் கோரின.

மொத்தத்தில், 2,820 வகையான பொருள்கள் ஒப்பந்தங்கள் மூலம் தனித்தனி வாடிக்கையாளர்களுக்கென அனுப்பி வைக்கப்பட்டன. அதே நேரத்தில் 18 வகையான ஒப்பந்தங்களுடன் லாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன.

இதுகுறித்து, இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ள பூனம் முத்ரெஜா, “ஆன்லைன் விநியோகம் அற்புதமான யோசனை. அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர் மூலம் கருத்தடை சாதனங்களை நேரடியாக விநியோகிப்பதில் குறைபாடு உள்ளது. ஆணுறைகள் பற்றிய தெளிவை மக்கள் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது” என்கிறார்.

நன்றி: Scroll.in

தமிழில்:ஆரோன்

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon