மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

புதுவை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முட்டை நிறுத்தம்!

புதுவை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முட்டை நிறுத்தம்!

புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவது படிப்படியாகக் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகப் பள்ளிகளில் முட்டைத் தரப்படவில்லை. முட்டை விலை அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

புதுவை அரசின் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளி நாள்களில் மதிய உணவோடு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் முட்டை வழங்கப்படுவது வழக்கம்.

இத்திட்டத்தில் புதுச்சேரியில் 432 அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் 68,150 மாணவ மாணவியருக்கு முட்டை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த ஜூலை மாதம் வரை வாரத்துக்கு இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. ஜூலை மாதத்துக்குப் பிறகு முட்டை வழங்குவது படிப்படியாக குறைந்து வாரத்துக்கு இரண்டு முட்டைகளுக்குப் பதிலாக மாதத்துக்கு இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. ஒரு சில நாள்களில் ஒரே நாளில் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் ஒரே ஒருநாள் மட்டும் ஒரு முட்டை வழங்கப்பட்டது. இந்த மாதமும் அதேநிலை தான் நீடிக்கிறது. படிப்படியாக முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. முட்டை விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கல்வித் துறையில், “முட்டை சப்ளை செய்வதைப் பொறுத்து வழங்கப்படுகிறது. நிலவேம்பு கஷாயம் கொடுத்ததாலும், தொடர்மழையின் காரணமாகவும் முட்டை நிறுத்தப்பட்டது. விலை உயர்வு காரணமாக நிறுத்தப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon