மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

இந்தியாவிலேயே கல்வியில் முதலிடம்!

இந்தியாவிலேயே  கல்வியில் முதலிடம்!

‘கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகம் விளங்கக்கூடிய அளவுக்கு வளர்ச்சியை பார்க்க முடிகிறது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (நவம்பர் 22) தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில், 380.94 கோடி ரூபாய் மதிப்பிலான 214 திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். 8.08 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும் வழங்கினார். மலேசியாவில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். வெப் டிவியைக் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “முன்னர் வரலாறு காணாத வறட்சி காலத்தில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. தற்போது பெய்த வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய அனைத்து இடங்களுக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து, உடனுக்குடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். தமிழகம் இன்றைக்கு அமைதிப்பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கு சிறப்பாகப் பேணிக்காக்கப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடு என்பது மக்களுக்குத் தெரியும்” என்று பேசிய முதல்வர், “கல்வியிலே, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கக்கூடிய அளவுக்கு வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூபாய் 26,932 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “மாநில அரசு எப்படி இயங்க வேண்டும் என்று யாரும் பாடம் நடத்த தேவையில்லை” என்றார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் குரல் புறக்கணிக்கப்பட்ட நிலையில், நவோதயா பள்ளிகள் கொண்டுவருவதன் மூலம் இந்தி திணிப்பும் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், ‘கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது’ என்று முதல்வர் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நீட் தேர்வில் தமிழகத்தை விட மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon