மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

சிறப்புக் கட்டுரை: அரசும் ஆளுகையும் - மோடி உணர வேண்டிய உண்மை!

சிறப்புக் கட்டுரை: அரசும் ஆளுகையும் - மோடி உணர வேண்டிய உண்மை!

சுவாமி அக்னிவேஷ், வல்சன் தம்பு

நல்ல நோக்கங்களுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. ‘நரகத்துக்கான பாதை, நல்ல நோக்கங்களின் வழியாகவே போடப்படுகிறது’ என்று சொல்லப்படுவதுண்டு. பொது வாழ்க்கை என்று வரும்போது, நல்ல நோக்கங்கள் பாராட்டத்தக்கதுதான். ஆனால், அது மட்டுமே போதாது. நாடு போகும் போக்கைப் பார்த்தால், இதை வேறு யார் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக நரேந்திர மோடி ஒப்புக்கொள்வார் என்றே தோன்றுகிறது.

சிறிய அரசு, சீரிய ஆளுகை என்ற ஆடம்பர வார்த்தைகளுடன் தன் ஆட்சியைத் தொடங்கினார் மோடி. இவருடைய நோக்கத்தில் இருந்த நேர்மையைப் பலர் சந்தேகப்பட்டார்கள். ஆனால், நாம் அப்படி அல்ல. நோக்கங்களின் தன்மையை நிரூபிக்க முடியாது என்பதால், நோக்கங்கள் குறித்த நமது பார்வையை அடிப்படையாக வைத்து யாரையும் எடைபோட முடியாது. ஒரு மரம் என்பது அதன் பழங்களை வைத்துதான் பார்க்கப்படும். நல்ல மரம் என்று நட்ட ஒன்று மோசமான பழங்களைத் தர ஆரம்பிக்கும்போது, எது தவறாகிப்போனது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

நூறாண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட டேவிட் தொரோவின் முழக்கத்தை மோடி சுவீகரித்துக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. யாரிடமிருந்தும் கருத்துகளைத் தழுவிக்கொள்வது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் இடம், பொருள், ஏவல் அறிந்து அதைப் பொருத்தமாக நடைமுறைப்படுத்தாமல் அசந்தர்ப்பமாகக் கையாள்வதுதான் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது.

அரசாங்கமும் ஆளுகையும்

தொரோவின் கருத்துபடி அரசாங்கம் என்பது, ஆள்வோரால் மக்களுக்கு வழங்கப்படுவது. மக்கள் எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்னும் முன் அனுமானம் இதில் இருக்கிறது. அரசு இயந்திரத்தை இயக்குவோருக்கு முடிவெடுத்தல், பொது ஆதார வளங்கள் மற்றும் முனைப்பு நடவடிக்கைகளில் ஏகபோக அதிகாரம் உள்ளது. மக்கள் பெறுபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். மோசமானதொரு சூழ்நிலையில், பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றும் சொல்லலாம்.

ஆனால், ஆளுகை என்பது வேறு. மக்களை ஆற்றல் படைத்தவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் உயர்த்தி அவர்களின் நல்வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வைப்பதுதான் ஆளுகையின் அடிநாதம். மக்களின் பொறுப்புணர்வு, ஆற்றல் நிறைந்த பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில், இது அமைய வேண்டும். இப்படிப்பட்ட பொறுப்புகளை ஏற்க மக்கள் முன்வராத நிலையில், அரசாங்கம் என்பது ஆளுகையாக மாறாது.

‘சிறிய அரசு, சீரிய ஆளுகை’ என்ற உறுதி நமக்கு அளிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் அரசின் ஆதிக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தலைவிரித்து ஆடுகிறது. ஆளுகை சரிவடைந்து வருகிறது. இதுவரையிலான நடவடிக்கைகள் அனைத்துமே ஆட்சி அதிகாரத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ளும் வகையில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை நாம் கண்டுள்ள அடுத்தடுத்த அதிர்ச்சியான நிகழ்வுகள், ஜனநாயகத்துக்குக் கேடு விளைவிப்பதாகவே அமைந்துள்ளன. ஆனால், மோடி மக்களை ஏமாற்றுகிறார் என விமர்சகர்கள் கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை. மோடியே ஒரு குழப்பத்தில் சிக்கியுள்ளார். அவரே அதை எதிர்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ இல்லை. தான் வாயில் போட்டுக்கொண்டிருப்பது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. தன்னால் அதைச் செரிக்க முடியுமா என்பதும் அவருக்குத் தெரியாது.

“மக்களாகிய நாம்...”, எந்தத் தலைவரையும்விட, கிட்டத்தட்ட இறைத்தன்மை கொண்டவராகச் சித்திரிக்கப்படும் மோடி போன்ற தலைவரையும்விட, மிகவும் தீர்மானமானவர்கள். மூர்க்கத்தனமான நாயகர்களை எல்லாம் இருந்த இடம் தெரியாமல், சுருக்கிவிடுவது வரலாற்றுக்குக் கைவந்த கலை. மோடிக்கும் இது நடக்கும். நம்மிடம் ஜனநாயகத்தின் சாயல் இன்னும் எஞ்சி இருந்தால், மோடியை விட்டுவிட்டு மக்கள் மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். இதைத்தான் மோடி செய்திருக்க வேண்டும். இதைச் செய்யாதது அவரது இமாலயத் தவறு. காலம் இதை நிரூபிக்கும்.

மோடியின் இதர கணிப்புகள் பொய்த்துப்போனதற்கு இந்தத் தவறுதான் அடிப்படைக் காரணம். மக்கள் வளத்தை நமது தலையாய வளமாக எடுத்துக்கொள்ளாவிட்டால், எல்லாமே பணத்தை மையமாகக் கொண்டதாக அமைந்துவிடும். சிறந்த ஆளுகை என்பது பணத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகிவிடும். பொருள் சார்ந்த வளங்கள் சமுதாயத்தின் தரத்தை எப்படி மேம்படுத்த முடியும்? நிஜமான “மனிதவள மேம்பாடு” என்பது இல்லாமல், அனைவரும் சம நீதியை எப்படிப் பெற முடியும்? பொருளாதார மேதைகளும் சர்வ வல்லமை படைத்த நிதி ஆயோக் அமைப்பில் அங்கம் வகிக்கும் மாயாஜால நிபுணர்களும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

உண்மையான ராம ராஜ்ஜியம்

சிறந்த ஆளுகையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரே காரணி மக்களின் நற்பண்புதான். அரசியல் ஆதாயத்துக்காக மீண்டும் ராமர் கோயில் பிரச்னை இன்று எழுப்பப்படுவதைப் பார்த்தால், வேடிக்கையாக உள்ளது. ராமபிரான் நற்பண்புகளின் அடையாளச் சின்னமாகப் போற்றப்படுகிறார். இந்த நற்பண்பு, சிறந்த ஆளுகைக்கு அடித்தளமான இந்த நேர்மை, ராமபிரான் என்ற தனிநபருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்படவில்லை. “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதுதான் கோட்பாடாக இருந்தது. ராமபிரானின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், நற்பண்பின் அடையாளச் சின்னமான ராமபிரான் காட்டிய பாதையைப் பின்பற்றுவதாக தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள், சிறந்த ஆளுகையின் அடிநாதமான நற்பண்பு கோட்பாட்டை பின்பற்றவில்லை.

இதில் மோடி கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் உள்ளது. கறுப்புப் பணத்தை எத்தனை பேர் சுருட்டிக்கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர் கண்காணிக்க வேண்டியதுதான். அதே சமயம், அவரது கண்காணிப்பின் கீழ் உள்ள தேசம் எத்தகைய பண்பினைக் கைக்கொள்கிறது என்பதிலும் அவர் கவனம் செலுத்த வேண்டும். “மன்னன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி” என்ற கோட்பாடு, குடியாட்சியைப் போலவே மக்களாட்சிக்கும் பொருந்தும். மன்னரின் நிலையில் பிரதமர் உள்ளார். புல்லட் ரயில்கள், பண மதிப்பு நீக்கம் அல்லது ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றின் அடிப்படையில் வரலாறு மோடியை எடைபோடாது. அவருடைய தலைமையில் ஒட்டுமொத்த தேசத்தின் நற்பண்பு மேம்பட்டுள்ளதா அல்லது சரிந்துள்ளதா என்பதை வைத்துத்தான் வரலாறு அவரை மதிப்பிடும்.

நாங்கள் வறட்டுத்தனமான மதசார்பின்மை சித்தாந்தவாதிகள் போன்றவர்கள் அல்ல. சிறந்த ஆளுகைக்கும் ராம ராஜ்ஜியத்துக்கும் இடையே எந்த முரண்பாட்டையும் நாங்கள் காணவில்லை. இந்த இரண்டின் சங்கமத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால், ராம ராஜ்ஜிய முழக்கத்தை, வகுப்புவாதக் கொக்கரிப்பாகச் சிறுமைப்படுத்திவிடக் கூடாது. ராம ராஜ்ஜிய முழக்கத்தைத் தகர்ந்துகொண்டிருக்கும் நமது தார்மிக அடித்தளக் கட்டமைப்பைப் புனரமைப்பதற்கான உறுதிப்பாடாக ஏற்க வேண்டும். நமது ஆன்மாவின் ஆதாரமானது பொருள் அடிப்படையிலான வளமையைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காந்திஜி கூறியதைப் போன்று மனச்சாட்சி இல்லாத அறிவியல் தீங்கு விளைவிப்பது. சமூக நீதிக்கு இடம் தராத செல்வமும் அதைப் போன்றதுதான். இத்தகைய செல்வம் பேராசையை தேசத்தின் கடவுளாக ஆக்கிவிடும்.

தார்மிக உணர்வினால் பேராசையைத் தணித்து, நற்பண்பினால் டாலரின் ஆற்றலைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் நாம் சிறந்த ஆளுகையை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம். அத்தகைய நற்பண்பே ராமபிரானை உண்மையாகப் பிரதிபலிக்கும்.

(சுவாமி அக்னிவேஷ் ஆர்ய சமாஜத்தின் உலகளாவிய கவுன்சலின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்)

நன்றி: Scroll.in

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon