மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 நவ 2017

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் நீண்ட கால நோய்கள்!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் நீண்ட கால நோய்கள்!

சுவகத்தா யாதவர்

கடந்த 26 ஆண்டுகளாக மக்களின் வருமானம் தொடர்ந்து அதிகரித்ததால், இந்தியாவில் நோய்களின் சுமையும் அதிகரித்துவிட்டது. 2016ஆம் ஆண்டில் 61.8 சதவிகித உயிரிழப்புகள் இதயநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற தொற்றா நோய்கள் மூலமாகவே ஏற்பட்டுள்ளன. 1990ஆம் ஆண்டில் 53.6 சதவிகித உயிரிழப்புகள் மகப்பேறு, புதிதாகப் பிறந்த குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சார்ந்த தொற்று நோய்களாலேயே ஏற்பட்டுள்ளன.

நோய்ச் சுமை, ஆபத்துகள் ஆகியவை பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியப் பொதுநல ஃபவுண்டேஷன், சுகாதார மெட்ரிக்ஸ் மற்றும் மதிப்பாய்வுக் கழகம் ஆகியவை முதன்முறையாக மாநில வாரியாக மதிப்பிட்டு ‘இந்தியா: ஹெல்த் ஆஃப் தி நேஷன்ஸ் ஸ்டேட்ஸ், தி இந்தியா ஸ்டேட் லெவெல் டிசீஸ் பர்டன் இனிஷியேட்டிவ்’ என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நோய்கள், குறைபாடுகள், அகால மரணம் ஆகியவை பற்றி முதன்முதலாக அனைத்து 29 மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் சிலவற்றில் மிகப்பெரிய நாடுகளுக்கு இணையான மக்கள்தொகை உள்ளது. இதில் 2,000க்கும் அதிகமான இனக் குழுக்களும் அடங்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் 1990ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை 333 நோய்கள் மற்றும் 84 ஆபத்துக் காரணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

இந்தியாவில் வயிற்றுப்போக்கு, சுவாசத்தொற்று, காசநோய், பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் கோளாறுகள் போன்றவை குறைந்துள்ளது என்றாலும்கூட, அவற்றின் அளவீடு இன்னும் அதிகமாகவே உள்ளது. அதே வேளையில் இதயநோய், பக்கவாதம், சர்க்கரைநோய் போன்ற நீண்ட கால நோய்களின் பங்கும் அதிகரித்து வருகிறது.

1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் நீண்ட கால நோய்களின் பங்கு 37.7 சதவிகிதமாக இருந்துள்ளது. பத்தில் நான்கு உயிரிழப்புகள் நீண்ட கால நோய்களாலேயே ஏற்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டில் நீண்ட கால நோய்களின் பங்கு 61.8 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது (பத்தில் ஆறு உயிரிழப்புகள் நீண்ட கால நோய்களால் ஏற்பட்டன).

குறுகிய கால நோய்கள், மகப்பேறு நோய்கள், பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் ஆகியவை சுகாதாரமின்மையாலேயே ஏற்படுகின்றன. இவ்வகை நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். உயிரிழப்புகளில் இவ்வகை நோய்களின் பங்கு 1990ஆம் ஆண்டில் 27.5 சதவிகிதத்திலிருந்து 2016ஆம் ஆண்டில் 27.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே நோய்ச் சுமையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

உயிரிழப்புகளில் காயங்களின் பங்கு 1990ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதத்திலிருந்து 2016ஆம் ஆண்டில் 2.2 சதவிகிதப் புள்ளிகள் அதிகரித்து 10.7 சதவிகிதமாக இருந்துள்ளது. குழந்தைப் பிறப்பின் போதான ஆயுள் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இக்குறியீடு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார நிலையை அளவிடப் பயன்படுகிறது. இக்குறியீடு 1990ஆம் ஆண்டில் ஆண்களுக்கு 58.3 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 59.7 ஆண்டுகளாகவும் இருந்தது. 2016ஆம் ஆண்டில் ஆண்களுக்கு 66.9 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 70.3 ஆண்டுகளாகவும் அதிகரித்துள்ளது.

ஏழை மாநிலங்களில் குறுகிய கால நோய்கள், மகப்பேறு நோய்கள், பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் சுமை இன்னும் அதிகமாகவே உள்ளது. வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே சுகாதாரக் குறியீடுகள் வேறுபடுகிறது. சமூக - பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா, பீகார், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொற்று நோய்களின் சுமை மிக அதிகமாக உள்ளன. வளர்ந்த மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கோவா ஆகியவற்றில் நீண்ட கால நோய்களின் சுமை அதிகமாக உள்ளது.

நோய் பரவல் விகிதம் கேரளாவில் 0.16 ஆகவும், கோவாவில் 0.21 ஆகவும், தமிழ்நாட்டில் 0.26 ஆகவும் இருந்துள்ளது. இம்மாநிலங்களில் நீண்ட கால நோய்களின் சுமை அதிகமாக இருப்பதையே இது காட்டுகிறது. நோய் பரவல் விகிதம் பீகாரில் 0.74 ஆகவும், ஜார்கண்டில் 0.69 ஆகவும் உள்ளது. இது, இம்மாநிலங்களில் தொற்று நோய்கள், மகப்பேறு மற்றும் ஊட்டச்சத்து நோய்களின் ஆதிக்கத்தையே காட்டுகிறது.

குறுகிய கால நோய்ச் சுமை நீண்ட கால நோய்ச் சுமையாக மாறிய காலமும் மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது. இந்தியாவில் பெரும் பகுதிகளில் 2003ஆம் ஆண்டிலேயே இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 2005ஆம் ஆண்டிலும், சமூகப் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மாநிலங்களில் 2009ஆம் ஆண்டிலும் நீண்ட கால நோய்களின் சுமை அதிகரித்துள்ளது.

பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், சர்க்கரைநோய் போன்ற நீண்ட கால நோய்களால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வயிற்றுப்போக்கு, சுவாசத் தொற்று, காசநோய் போன்ற நோய்களால் குறுகிய கால நோய்களின் பிரிவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. காயங்கள் பிரிவில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் சாலை விபத்துகள், தற்கொலைகளாலேயே ஏற்பட்டுள்ளன.

நீண்ட கால நுரையீரல் அடைப்பு நோயால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் பின்தங்கிய மாநிலங்களில் அதிகமாகவே இருந்துள்ளது. முக்கியமாக ராஜஸ்தானில் 1,00,000க்கு 111 பேர் என்ற விகிதத்தில் இருந்துள்ளது.

வயிற்றுப்போக்கு, காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் பின்தங்கிய மாநிலங்களில் அதிகமாக இருந்துள்ளது. உதாரணமாக, வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் விகிதம் 1,00,000க்கு ஜார்கண்டில் 120 பேராகவும், கோவாவில் 14 ஆகவும் இருந்துள்ளது. காசநோயால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் விகிதம் 1,00,000க்கு உத்தரப்பிரதேசத்தில் 58 ஆகவும், கேரளாவில் 8 ஆகவும் இருந்துள்ளது.

1990ஆம் ஆண்டில் வயிற்றுப்போக்கு, சுவாசத் தொற்று ஆகியவை நோயுற்ற ஆண்டுகளுக்குப் பங்களிக்கும் முக்கியக் காரணங்களாக இருந்தது. ஆனால் 2016ஆம் ஆண்டில் இதய ரத்த ஓட்டத் தடை, நுரையீரல் அடைப்பு ஆகிய நோய்கள் நோயுற்ற ஆண்டுகளுக்குப் பங்களிக்கும் முக்கிய நோய்களாக உருவெடுத்துள்ளன.

சர்க்கரை நோய் 35ஆவது இடத்திலிருந்து 13ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. இதய ரத்த ஓட்டத் தடையால் ஏற்பட்ட நோயுற்ற ஆண்டுகளின் எண்ணிக்கை 104 சதவிகிதம் அதிகரித்து 40.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. சர்க்கரை நோயால் ஏற்பட்ட நோயுற்ற ஆண்டுகளின் எண்ணிக்கை 174 சதவிகிதம் அதிகரித்து 10.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. குறுகிய கால நோய்களில் ரத்த சோகை மட்டும் நோயுற்ற ஆண்டுகளுக்குப் பங்களித்துள்ளது.

நோய்ச் சுமையில் காயங்களின் பங்கு 1990ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. காயங்களால் ஏற்படும் நோய்ச்சுமையின் விகிதம் இளம் தலைமுறையினரிடையே அதிகமாக உள்ளது.

நோய்கள் ஏற்படுவதற்கு அவற்றுக்கான ஆபத்துக் காரணிகளே காரணம். இவற்றை நிச்சயமாகத் தடுக்க முடியும். குழந்தைகள், மகப்பேறு ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற நோய்ச் சுமைகள் 1990ஆம் ஆண்டிலிருந்தே குறைந்துள்ளது. இந்தியாவில் நோய்கள் ஏற்படுவதற்கு இவையே முதல் ஆபத்துக் காரணியாக உள்ளது. ஏனெனில் இதனால் பச்சிளங்குழந்தைகளிடையே குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகள், மற்ற தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இவை இந்தியாவின் மொத்த நோய்ச் சுமையில் 15 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளன.

குழந்தை, மகப்பேறு ஊட்டச்சத்து குறைபாடு பின் தங்கிய மாநிலங்கள் மற்றும் அசாமில் அதிக ஆபத்துகளை விளைவிக்கின்றன. இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்துக் காரணிகளாக இருப்பவற்றில் காற்று மாசுபாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்தியர்களின் மொத்த நோயுற்ற ஆண்டுகளில் காற்று மாசுபாட்டின் பங்கு 6.4 சதவிகிதமாக உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் நோய்ச் சுமைகளான இதய நோய்கள், சுவாசக் கோளாறுகள் ஆகியவற்றுக்குப் பங்களிக்கிறது.

உணவில் காய்கறிகள், பழங்கள், தானியங்களின் அளவு குறைவாக இருப்பதும் ஆபத்துக் காரணிகளாக உள்ளன. இருப்பினும், அதிக உப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக சர்க்கரை ஆகியவை இந்தியாவின் நோய் ஆபத்துக் காரணிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாதுகாப்பில்லாத நீர், சுகாதாரமின்மை ஆகியவற்றால் ஏற்படும் நோய்ச் சுமை இந்தியாவில் குறைந்து இரண்டாவது முன்னணி ஆபத்துக் காரணியில் இருந்து ஏழாவது இடத்துக்குச் சரிந்துள்ளது. இருப்பினும் இப்பிரச்னை பின் தங்கிய மாநிலங்களிலும், அசாமிலும் அதிகமாக உள்ளது.

உலக நாடுகள் அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து சுகாதாரத்தில் முதலீடு செய்யும் சராசரி விகிதம் 6 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதம் சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும் என்று மோடி உறுதியளித்திருப்பது வெட்கத்துக்குரியது.

நன்றி: இந்தியா ஸ்பெண்ட்

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 23 நவ 2017