மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

வெளிமாநிலத்தில் அரசுப் பணிக்கு அனுமதிப்பார்களா?

வெளிமாநிலத்தில் அரசுப் பணிக்கு அனுமதிப்பார்களா?

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு, விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதற்கு விளக்கமளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, போட்டித் தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் நடைமுறை முன்பிருந்தே நடைமுறையில் இருப்பதாகவும், தற்போதும் அந்த விதி பின்பற்றப்பட்டு வருவதாகவும், வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பித்தால் அவர்கள் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவர். இதனால் இடஒதுக்கீடு முறைக்கு எவ்வித பாதிப்புமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று (நவம்பர் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசுப் பணியில் பிற மாநிலத்தவர் பங்கேற்பது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதற்கான நிலைமையே ஆகும். தமிழக இளைஞர்கள் வேலையின்றி திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளைப் பிற மாநிலத்தவருக்குத் திறந்துவிடுவது எந்த விதத்திலும் நியாயமானதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு அலுவகங்களில் ஏற்கெனவே வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைத்தான் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் மாநில அரசுப் பணிகளையும் பிற மாநிலத்தவருக்குத் திறந்து விடுவது தமிழக மக்களுக்குச் செய்யும் தீங்காகவே கருதப்படும்” என்றார்.

தொடர்ந்து மகராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பியவர், “பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிப்பதால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு அவர்களிடம் தேவையற்ற பதற்றத்தையும்தான் உருவாக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்து இந்த முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon