மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

தலைநிமிர்ந்து வாழ்வதாக எண்ணி தலைகுனிந்தே செல்வதற்குக் காரணமான ஒன்று ஸ்மார்ட்போன். ஏன், இப்பொழுது இதை படிப்பதுகூட போனில் இருக்கலாம்.

போன் மட்டுமல்லாது வேறு சில காரணங்களும் நம் முதுகும் கழுத்தும் வளைதலை ஏற்படுத்துகின்றன. அன்றாட வேலைகளிலேயே இதனை நாம் கண்டு வருகிறோம். கழுத்துவலியும் முதுகுவலியும் வயதுக்கும் வேலைக்கும் ஏற்றார்போல் வந்துகொண்டுதான் இருக்கிறது.

உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதைக் கவனிக்கிற நாம், கழுத்துவலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. ஏதோ ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறோம். வலி முற்றி, கழுத்துக்குப் பட்டை போட வேண்டிய அளவுக்கு வரும் வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால், கழுத்துவலி என்பது, முதுகுத்தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.

“கழுத்து வலி என்பது சின்ன வயசு, நடுத்தர வயசு, முதியவர்கள் என்று எந்த வயதிலும் வரலாம். விடலைப் பருவத்துல வரும் கழுத்து வலிக்கான காரணம், அதிகப்படியான உபயோகம். பாடசாலையில் முதல் பெஞ்சில் உட்கார்ந்து, போர்டை அண்ணாந்து பார்ப்பது, தரையில் உட்கார்ந்து எழுதுவது, சரியான நிலையில் உட்காராத நிலையில் வலி வரலாம்.

கம்ப்யூட்டரை சரியான பொசிஷனில் வைத்து உபயோகிக்காதது, எப்போ பார்த்தாலும் லேப் டாப் முன்னாடியே இருக்கிறது, படுத்துக்கொண்டு கம்ப்யூட்டரை உபயோகிக்கிறது இதெல்லாம் இளம் வயதினருக்கு வரும் கழுத்துவலிக்கான காரணங்கள்.

கழுத்தின் பக்கத்தில் உள்ள தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்வில் அழுத்தம் அதிகமாகும். "செர்வைகல் டிஸ்க்'னு சொல்லப்படும் இந்த சவ்வு விலகி, பக்கத்துல உள்ள நரம்புகளை அழுத்துவதால் கழுத்துவலி ஏற்படலாம். அப்படி உண்டாகிற வலி, கைகளுக்கும் கால்களுக்கும் பரவலாம். வயதானவர்களுக்கு வரக்கூடிய கழுத்துவலி "செர்வைகல் ஸ்பான்டி லைட்டிஸ்'னு சொல்லப்படுகிறது. 50 வயதுக்கு மேல் வரக்கூடியது இது. கழுத்தில் மொத்தம் ஏழு எலும்புகள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையில் இணைப்புகளும், சவ்வும் இருக்கும்.

முதுமையின் காரணமாக தேய்மானம் ஏற்படும்போது, அது பக்கத்தில் உள்ள தண்டுவடம் (ஸ்பைனல் கோர்ட்) மற்றும் நரம்புகளில் அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். தண்டுவடம் பாதிக்கப்படுகிற இந்த நிலைக்கு "செர்வை கல் மைலோபதி' என்று கூறப்படும். நரம்புகளும் வரும் வழி சிறுத்துப் போய், கை, கால்கள் சோர்வுற்று, அந்தப் பகுதிகளில் உணர்ச்சிகளும் குறையும். சின்னப் பொருள்களைக் கூடப் பிடிக்க முடியாமல் தவற விடுவது, சாவியால பூட்டைத் திறக்க முடியாதது, புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு படிக்க முடியாது என்று மறைமுக அறிகுறிகளை உணர்வார்கள் பாதிக்கப்பட்டவர்கள். தண்டுவடம் பாதிக்கப்படுவதால் கால்களும் சோர்வாகி, நடை மாறலாம். பாதங்களிலும் உணர்ச்சி குறையலாம்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon