மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

முஸ்லிம் பெண்களின் புர்க்காவை அகற்றிய பெண் காவலர்!

முஸ்லிம் பெண்களின் புர்க்காவை அகற்றிய பெண் காவலர்!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த முஸ்லிம் பெண்களின் புர்க்காவைக் காவல்துறையினர் அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்துக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று (21-11-17) பாலிலா நகருக்கு வந்தார். பிறகு அங்கு நடந்த பேரணியில் கலந்துகொண்டார். அந்தப் பேரணியில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டார்கள். மேலும், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ஏராளமான முஸ்லிம் பெண்களும் வந்திருந்தனர். முதலமைச்சர் மேடைக்கு வருவதற்கு முன் அங்கிருந்த பெண் காவலர்கள் இஸ்லாமிய பெண்ணின் புர்காவை அகற்றச் சொல்லிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. பின்னர் அந்தப் பெண்ணின் பெயர் சாய்ரா என்பதும் அவர் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர் என்பதும் தெரியவந்தது. தன்னுடைய கிராமத்தில் இருந்து பாரம்பர்ய உடையுடன் கலந்துகொள்ள வந்ததாகவும், அங்குள்ள பெண் காவலர் புர்க்காவை நீக்கச் சொல்லியதாகவும் கூறினார். மேலும் ஒருசில பெண்கள் புர்க்காவை அகற்றாத நிலையில் காவலர்களே அவர்களின் புர்க்காவை அகற்றினார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடியாக நகர நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட நீதிபதி சுரேந்திர விகுஜராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதேபோல காவல் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் செய்தியாளர்களிடம், “இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு பெறப்பட்டுள்ளது. உடனடியாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் கலந்துகொள்ளும் பேரணியில் யாரும் கறுப்பு கொடி காட்டக் கூடாது என்று எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. இருந்தாலும் இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என்று முறையாக விசாரிக்கப்படும். நகர துணை காவல் கண்காணிப்பாளர் இந்த விசாரணையை மேற்கொள்வார்” என்று கூறினார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon