மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

வீட்டுக் காவலிலிருந்து ஹபீஸ் சயீத் விடுதலை!

வீட்டுக் காவலிலிருந்து ஹபீஸ் சயீத் விடுதலை!

2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பின் குற்றவாளியான ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்ய பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் 2008ஆம் ஆண்டில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல்கள் நடத்தினர். இதில், 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.

இதனால், ஹபீஸ் சயீத்தையும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரையும் வீட்டுக் காவலில் வைக்க கடந்த ஜனவரி மாத இறுதியில் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்த அவரது வீட்டுக்காவல் இம்மாத இறுதியில் முடிகிறது. இதனால், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை மூன்று மாதங்கள் நீட்டிக்க பாகிஸ்தான் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஹபீஸ் சயீத்தும் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், நேற்று (நவம்பர் 22) இவ்விரு வழக்குகளையும் விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் ஹபீஸ் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசு தவறி விட்டது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை சார்பில் தாக்குதல் செய்யப்பட்ட சில முக்கிய ஆதாரங்களும், ஹபீஸ் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை என உயர் நீதிமன்றம் ஹபீஸை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. வேறு வழக்குகளில் ஹபீஸிடம் விசாரணை தேவையில்லை எனில் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் அரசு அவரை வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்க வாய்ப்புள்ளது.

ஹபீஸை விடுதலை செய்தால் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகளை நிறுத்தப்போவதாக ஏற்கெனவே சர்வதேச அமைப்புகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon