மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ஜிஎஸ்டி: விலையைக் குறைத்த நிறுவனங்கள்!

ஜிஎஸ்டி: விலையைக் குறைத்த நிறுவனங்கள்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருள்களின் விலையைக் குறைத்துள்ளன.

கவுஹாத்தியில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், மக்களின் அத்தியாவசியப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட 178 பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை, 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்தது. இதன் எதிரொலியாக வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான ஐடிசி, டாபர், ஹிந்துஸ்தான் யூனிலிவர், மரிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பொருள்களின் விலையைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், சமீபத்தில் பொருள்களுக்கான வரி விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்களது உற்பத்திப் பொருள்களின் விலையை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மாற்றம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. வரி காரணமாக, 50 கிராம் ப்ரூ காபித்தூளின் விலை ரூ.145லிருந்து ரூ.111ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருள்களின் விலைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மரிகோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விவேக் கார்வி கூறுகையில், “எங்களது நிறுவனத்தின் வாசனைத் திரவியங்கள், ஹேர் ஜெல், ஹேர் க்ரீம், அழகு சாதனப் பொருள்களின் சந்தை விற்பனை விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எங்களது பொருள்களை இருப்பு வைத்திருக்கும் விற்பனையாளர்களுக்குப் புதிய விலை நிலவரம் அடங்கிய ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி விற்பனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon