மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ்!

உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ்!

உத்தரப் பிரதேசத்தில் நிகழும் என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்னர் என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதங்களில் 430க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், அப்பாவிகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உ.பி. முதல்வர் யோகி, “குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவர் அல்லது என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படுவர்” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் உ.பியில் நிகழும் என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அம்மாநிலத் தலைமைச் செயலாளருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை முன்னேற்றுவதாகக் கூறி போலீஸார் நடத்தும் என்கவுன்ட்டர்களுக்கு அரசு ஆதரவாக இருப்பதாகக் கூறியுள்ள ஆணையம், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு புதைகுழியில் இருந்தாலும், இதுபோன்ற நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபடக் கூடாது. இது சட்டத்தை மீறிய கொலைகளுக்கு வழிவகுக்கும். மேலும், அதிகார துஷ்பிரயோகமும் அரங்கேறும்” என தனது அறிக்கையில் கூறியுள்ளது.

“அரசு எடுக்கும் சில கொள்கைகளின் வெளிப்பாடாக, அச்ச உணர்வு அதிகரிப்பது என்பது ஒரு நாகரிகச் சமுதாயத்துக்கு நல்லது அல்ல. வாழ்வதற்கான உரிமை மற்றும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை மீறுவதாய் இந்த நடவடிக்கைகள் அமையும்” என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon