மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

கிச்சன் கீர்த்தனா - ட்ரை ஃப்ரூட்ஸ் ரைஸ்!

கிச்சன் கீர்த்தனா - ட்ரை ஃப்ரூட்ஸ் ரைஸ்!

‘அதே சாதம்... அதே சமையல்... போர்ம்ம்மா’ எனக் கவலையுறும் குழந்தைகளுக்கு, பெண்கள் வெளியில் அழைத்துச்சென்று வெரைட்டியான உணவுகளை வாங்கித் தருவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருப்பதையும் தாண்டி, சிலர் வித்தியாசமாக யோசித்து சமைக்கவும் செய்கின்றனர். அவற்றில் ஒன்று ட்ரை ஃப்ரூட்ஸைக் கொண்டு வெரைட்டி ரைஸ் செய்வது.

தேவையானவை:

முந்திரி, பாதாம், திராட்சை எல்லாம் சேர்த்து – அரை கப், டூட்டி ஃப்ரூட்டி – சிறிதளவு, பாசுமதி அரிசி – ஒரு கப், தேங்காய்ப் பால் – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, கொத்தமல்லித்தழை – சிறிதளவு நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் தேங்காய்ப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்து, கழுவிய அரிசியைச் சேர்த்து மூடி, ஒரு விசில் வந்ததும் எடுக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி, பாதாமை நன்கு வறுக்கவும். அடுப்பை நிறுத்தி, திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும் (டூட்டி ஃப்ரூட்டியை அப்படியே ஃபிரெஷ்ஷாக வைக்கவும்). வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காயைத் தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து நன்கு வதக்கி, கடைசியாக டூட்டி ஃப்ரூட்டி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிபரிமாறினால் வாட்ஸப் வடிவேலு போன்ற அதிபுத்திசாலிகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கீர்த்தனா சிந்தனைகள்:

கரண்டி ரொம்ப ‘வெயிட்’ என்பது, கடையில வாங்கும்போது தெரியாது!

வீட்ல ‘வாங்கும்’போதுதான் தெரியுது... என்னா அடி!

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon