மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

தகவல் திருட்டுக்கு ஒரு லட்சம் டாலர்!

தகவல் திருட்டுக்கு ஒரு லட்சம் டாலர்!

உபேர் டாக்ஸி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சுமார் 5.7 கோடிப் பேரின் சுய விவரங்கள் திருடப்பட்டதால், அத்தகவல்கள் குறித்து ரகசியம் காக்க அந்நிறுவனம் தகவல் திருடிய ஹேக்கர்களுக்கு ஒரு லட்சம் டாலரை வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இந்தத் தகவல் திருட்டு நடந்ததாகவும், அதைத் திருடிய ஹேக்கர்கள் தகவல்களைக் கசியவிடாமல் ரகசியமாக வைத்திருக்க ஒரு லட்சம் டாலரை (இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.64,91,660.00) வழங்கியதாகவும் உபேர் டாக்ஸி நிறுவன தலைமைச் செயலதிகாரியான டாரா கோஸ்ரோசகி ஒப்புக்கொண்டுள்ளார். திருடப்பட்ட தகவல்களில் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கும். வாடிக்கையாளர்கள் தவிர, உபேர் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆறு லட்சம் பேரின் சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளன.

ரகசியமிக்கத் தகவல்களாகக் கருதப்படும் ஓட்டுநர்களின் பயண விவரம் (டிரிப்), கிரெடிட் கார்டு நம்பர், வங்கிக் கணக்கு விவரங்கள், சமூகப் பாதுகாப்பு எண்கள் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களும் திருடப்பட்டுள்ளன. இந்தத் தகவல் திருட்டில் சம்பந்தப்பட்ட (தகவல் திருட்டை மறைக்க முயன்ற) உபேர் நிறுவன ஊழியர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகவல் திருட்டு குறித்து டாரா கோஸ்ரோசகி கூறுகையில், “இது எதுவுமே நடந்திருக்கக் கூடாது. முன்னால் நடந்ததை என்னால் அழிக்க முடியாது. ஆனால், உபேர் நிறுவன ஊழியர்கள் அனைவரின் சார்பாகவும் கூறுவது யாதெனில், தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். எங்களது தொழிலை இன்னும் வலுப்படுத்தவும், மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளையும் நன்கு ஆராய்ந்து செயல்படவும், வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கவும் முயற்சிப்போம்” என்று மன்னிப்பு கோரியுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது