மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

ஒன்பதாம் ஆச்சாரியர்!

 ஒன்பதாம் ஆச்சாரியர்!

விளம்பரம்

வைணவ குருபரம்பரையின் சிறப்புகளையும், அதிசயிக்க வைக்கும் இந்த மரபுத் தொடர்ச்சியையும் நாம் இத்தொடரின் பல்வேறு பாகங்களில் பார்த்திருக்கிறோம்.

ராமானுஜர் என்ற மகானைப் பற்றி நாம் விரிவாகப் பார்த்திருக்கிறோம். காரணம் என்னவென்றால்... ராமானுஜர் மற்ற ஆச்சாரியர்களை விட வைணவத்தை நிறுவனமயப் படுத்தியதில் வெற்றி கண்டார் என்பதுதான். இன்றளவும் ராமானுஜர் செய்து வைத்தபடிதான் வைணவத் திருக்கோயில்களில் நியமங்கள் நடந்து வருகின்றன.

ஒரு குரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் வழிபட வேண்டும் இப்படித்தான் ஆலய ஒழுங்குகள் அமைய வேண்டும் என்று வரையறுத்துச் சொன்னதை... இன்றும் பின்பற்றி வருகிறார்கள் என்னும்போதே அந்த குருவின் சக்தியை, அந்த குருவின் ஆற்றல் இது எல்லாவற்றையும் விட அந்த குருவின் உண்மைத் தன்மை விளங்குகிறது.

ராமானுஜர் வைணவத்தைத் தோற்றுவித்தவர் அல்லர். ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தை தோற்றுவித்தவர் அல்லர். ராமானுஜர் ஆழ்வார்களுக்கு முற்பட்டவரும் அல்லர்.ஆனால்... ராமானுஜர் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வைணவத்தின் வளர்ச்சியில் வைணவத் திருக்கோயில்கள் நிலை நிறுத்தப்பட்டதில் மிகப் பெரும் பங்காற்றியிருக்கிறார் என்பதை வரலாறு சொல்கிறது.

குருபரம்பரையில் ராமானுஜர் பற்றி கூறப்பட்டிருக்கும் தகவல்களில் மிகைப்படுத்துதல் இருப்பதாக சிலர் வரலாற்றுக் கண்ணாடி போட்டுப் பார்த்துச் சொல்கிறார்கள். ஆனால் வைணவ வரலாற்றையே எழுதியது குருபரம்பரைதான், எனவே ராமானுஜரை சற்றே மிகைப்படுத்திச் சொன்னாலும் அதில் தவறில்லை. மிகையிருந்தாலும் அதில் பொய் ஏதும் இல்லை என்கிறார்கள் வைணவக் கண்ணாடி போட்டுப் பார்ப்பவர்கள்.

ஆக வரலாற்றுக் கண்ணாடி வைணவக் கண்ணாடி என இரண்டு பார்வைகளில் பார்த்தாலும் ராமானுஜர் இந்த இரு பார்வைகளையும் ஒரே மாதிரியே நியாயப்படுத்துகிறார்.

ராமானுஜருக்கு முன்பும் வைணவம் நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டிருக்கிறது.

பராசரர், வ்யாஸர், போதாயனர் ஆகியோர் யுகங்களுக்கு முன்பே விசிஷ்டாத்வைதத்தை போதித்தவர்கள். பராசரர் அருளிச்செய்த விஷ்ணுபுராணம் வைஷ்ணவ விசிஷ்டாத்வைதம் பற்றி விரிவாகப் பேசுகிறது. பராசரரின் மகனான வியாசர் வேதாந்த சூத்திரம் என்னும் ரத்தினத்தைப் படைத்தவர். அந்த ரத்தினச் சுருக்கத்தை மிக விளக்கமாக அறிய போதாயனர் சூத்திரம் படைத்தார்.

ராமானுஜர் தன் வாழ்வின் உன்னத முன்னோடிகளாகக் கொண்டது இவர்களை. அதனால்தான் காஷ்மீர் வரை நடந்து சென்று போதாயன சூத்திரத்தைக் கண்டுபிடித்துப் படித்தார் ராமானுஜர். ஆக ராமானுஜருக்கு முன்பும் பின்பும் வைணவ வானம் விரிந்து கிடக்கிறது.

அந்த வானத்தில் ராமானுஜர் மிகச் சிறந்த சூரியனாக பரிமளிக்கிறார் என்பதே உண்மை.குருபரம்பரையின் ஆசாரியர் பட்டியலில் ராமானுஜருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

ஆம்....

முதல் ஆசார்யன் திருமால் எனப்படும் நாராயணன். இரண்டாம் ஆசார்யன்: ஸ்ரீ மஹாலக்ஷ்மி மூன்றாம் ஆசார்யன்: ஸ்ரீ விஷ்வக்ஸேனர் (ஸேனை முதலியார்) இவர் ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுடைய சேனைக்குத் தலைவர் எனப்படுகிறவர்)

நான்காம் ஆச்சாரியரில் இருந்துதான் குருபரம்பரை மண்ணில் ஆரம்பிக்கிறது அந்த ஆச்சாரியர்கள் அத்தனை பேரும் தமிழ் மண்ணில் அவதரித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

நான்காம் ஆச்சாரியராக வந்தவர் நம்மாழ்வார். ஆழ்வார்களில் தலையாயவர் நம்மாழ்வார். முப்பத்து சொச்ச வயதிலேயே மோட்சம் அடைந்தவர். இவர்தான் ஐந்தாம் ஆச்சாரியரான நாதமுனிகளுக்கு ஆழ்வார்களின் அனைத்து அருளிச் செயல்களையும் உபதேசித்து, ‘உன் பேரன் காலத்தில் ஒரு ஆச்சாரியர் அவதரிப்பார்’என்று ராமானுஜரின் பிறப்பை முன் கூட்டியே கணித்து ஊகித்து உரைத்தவர்.

ஐந்தாம் ஆச்சாரியர் நாதமுனிகளுக்குப் பிறகு ஆறாம் ஆச்சாரியர் மணக்கால் நம்பி... ஏழாம் ஆச்சாரியார் ஆளவந்தார். இவர் நாதமுனிகளின் பேரன். எட்டாம் ஆச்சாரியார் பெரிய நம்பி.

ஒன்பதாவது ஆச்சாரியர்தான் இப்போது அகிலம் எல்லாம் அறியப்பட்ட ராமானுஜர்.

தனக்கு முன் உள்ள எட்டு ஆச்சாரியார்கள் செய்யாததை ராமானுஜர் செய்துவிடவில்லை. ஆனால் அவர்கள் செய்த விதத்தில் செய்யாமல் அதை வெகுஜன விதமாக, தத்துவ விதமாக, சம்பிரதாய விதமாக என பல விதங்களையும் பகிர்ந்து கொண்டு செய்தார். அதனால்தான் ஒன்பதாம் ஆச்சாரியர் ஓங்கியிருக்கும் இடத்தில் இருக்கிறார்.

எப்போதும் திருமாலிடத்தில் ஆழ்ந்திருந்து அவனையே நினைத்தமையால்தான் ஆழ்வார்கள் என்ற பெயர் வந்தது. ஆழ்வார்கள் திருமாலின் மீது ஆழ்ந்திருந்தார்கள் என்றால் நமது வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆழ்வார்களின் மீதே ஆழ்ந்திருக்கிறார். அதனால்தான் ஆழ்வார்கள் ஆய்வு மையம் அமைத்து வைணவக் கொடி பறக்க தமிழ்த் தொண்டு செய்து வருகிறார்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்.. ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்

விளம்பர பகுதி

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon