மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது முதல் மெசேஜ். "சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது கந்து வட்டி புகாரை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார். அன்புச்செழியன் மீது பின்னால் இருந்து ஆயிரம் புகார்கள் வந்தாலும் நேரடியாக யாரும் புகார் வாசித்ததில்லை. அப்படியே புகார் கொடுத்தாலும் அது குப்பைக்குத்தான் போகும் என்பது கொடுத்தவருக்கே தெரியும். அசோக்குமார் இப்படி ஒரு மரணக் குறிப்பை எழுதி வைத்துவிட்டுப் போனது எதிர்பாராத திருப்பம்.

அதிகாரத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆளும்கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு மிக நெருக்கமானவர் அன்புச்செழியன். இந்தச் சம்பவத்துக்கு பிறகு அந்த முக்கியப் பிரமுகரைத்தான் தொடர்பு கொண்டு பேசினாராம் அன்பு. 'நான் பார்த்துக்குறேன்' என உறுதி கொடுத்திருக்கிறார் அந்தப் பிரமுகர். உடனடியாக, தனக்கு நெருக்கமான, அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இரண்டு எழுத்து இயக்குநரிடம் அவர் பேசினாராம். 'லெட்டர் விஷயம் பெரிதுப்படுத்தாம பார்த்துக்கோங்க. நான் என்ன வேணுமோ செய்ய சொல்றேன்...' என டீலிங் நடந்திருக்கிறது. அந்த இயக்குநரோ, 'இந்தச் சூழ்நிலையில் நான் பேச முடியாது. அப்படிப் பேசினால் அது தப்பாகிவிடும். கோபம் என் மேல திரும்பிடும். நான் நேரில் போய் பார்த்துட்டு என்ன சூழ்நிலை என்று சொல்றேன்' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். ஆனால், அதற்கு முன்பே அங்கே ஏராளமான கூட்டம் கூடிவிட்டது. கடிதம் தொடர்பாக ஸ்டேஷன் வரை புகாரும் போய்விட்டது. அதனால் அந்த இயக்குநர் அமைதியாகிவிட்டார்.

இந்தத் தகவல்களை முக்கியப் பிரமுகருக்குச் சொல்லிவிட்டார் இயக்குநர். அன்பு மீது வழக்கு பதிவு செய்தாலும் கைது நடவடிக்கை உடனே வேண்டாம் எனக் காவல் துறைக்கும் உத்தரவு போனது. அன்புக்கு ஆதரவாக ஆளும்கட்சி தரப்பிலிருந்து தொடர்ந்து காவல் துறைக்கு போன் போனபடியே இருக்கிறதாம். 'அன்பு என்னா எல்லோர் வீட்டு வாசல்லயும் போய் நின்னு என்கிட்ட கடன் வாங்கிக்கோங்கன்னு பிசினஸ் பண்றாரா... அது யாரா இருந்தாலும பணம் வேணும் என்றால் அன்புவைத் தேடிப் போய்தான் ஆக வேண்டும். அவர் சொல்றதுக்கு எல்லாம் கட்டுப்பட்டுதான் பணம் வாங்கிட்டுப் போறாங்க. அப்புறம் கொடுக்கலன்னா கேட்கத்தானே செய்வாங்க...' என்று இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியிடம் கேட்டாராம் அமைச்சர் ஒருவர். சினிமா ஆட்களை எப்படி சமாளிப்பது, அமைச்சர்களை எப்படி எதிர்கொள்வது என விழி பிதுங்கி நிற்கிறது போலீஸ்” என்ற மெசேஜை போஸ்ட் செய்துவிட்டு ஒரு கேள்வியைத் தட்டிவிட்டது ஃபேஸ்புக்.

“ஆளுங்கட்சிப் பிரமுகர், ஆளுங்கட்சிப் பிரமுகர் என்கிறீர்களே, அது யார்? எம்.எல்.ஏ.வா?” என்று கேட்டது ஃபேஸ்புக்.

“அதுக்கும் மேல” என்று பதில் வந்தது.

“அமைச்சரா?”

“அதுக்கும் மேல…” என்று சொன்ன வாட்ஸ் அப், “ஆளுங்கட்சியினருக்கு அன்பு மீது இருக்கும் அன்புக்குக் காரணம் என்ன என்று எல்லோரும் கேட்கிறார்கள். பலரின் பணம் அவரிடம்தான் இருக்குறதாம்!" என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது.

புதன், 22 நவ 2017

அடுத்ததுchevronRight icon