மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

கந்துவட்டி: அஜித் மிரட்டப்பட்டார்!

கந்துவட்டி: அஜித் மிரட்டப்பட்டார்!

தமிழ் சினிமாவை உலுக்கிய ஒரு மரணமாக மாறியுள்ளது இணைத் தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலை மரணம்.

இயக்குநர் சசிகுமாரின் நண்பரும் கம்பெனி புரொடக்‌ஷன் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியுமான அசோக் குமார் கடன் பிரச்சினை காரணமாக நேற்று (நவம்பர் 21) மதியம், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமறைவான அன்புச்செழியனை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

அன்புச்செழியன் சினிமாத் துறையில் பலருக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். அவரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்தாலும் அவை வந்த வேகத்தில் காற்றோடு கரைந்துவிடும். ஆனால் தற்போது அசோக் குமாரின் தற்கொலை மற்றும் அவர் எழுதி வைத்த மரண வாக்குமூலம் அன்புச்செழியனின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலரும் அன்புச்செழியனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அன்புச்செழியன் குறித்து இயக்குநர் சுசீந்திரன் மிகவும் காட்டமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிமாவில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நான் கடவுள்’ நேரத்தில் அஜித் sir-ம் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி sir, கௌதம் மேனன் sir, தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இசையமைப்பாளர் இமானிடம் கூட எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று மறைமுகமாக சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்கு காரணமான அன்புச்செழியன் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் அஜித் பெயரை உபயோகித்து சுசீந்திரன் கருத்து தெரிவித்து விளம்பரம் தேடுவதாக சிலர் கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சுசீந்திரன், “அன்புச்செழியன் இல்லை எவங்கிட்டயும் 1 ரூபாய் கூட கடன் வாங்கியது இல்ல. விளம்பரம் தேடவேண்டிய அவசியமும் கிடையாது. அன்புச்செழியன் பற்றி எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதே என் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

“அசோக் குமாரின் பிரச்சினையில் அன்புச்செழியனின் செயல்பாடு மிகவும் தவறானது. முற்றிலும் கண்டிக்கத்தக்கது. என்னையும் சேர்த்து இங்குள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டியவர்கள் தான். நாங்கள் யாரும் ஓடி ஒளிந்துகொள்ளப் போவதில்லை. வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். கையை முறுக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“தமிழ் திரையுலகில் பிரபலமான பல முன்னணி தயாரிப்பாளர்கள் நிறைய பேர் இது போன்ற கந்துவட்டி சூழலில் மாட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுகூடி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

“கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே திரைத் துறையை சார்ந்த பலர் கடனில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. வெளியில் பிரபலங்களாக தெரிகிறார்களே தவிர உள்ளே புரையோடிப்போயுள்ளது. அரசுக்கு நிறைய வருமானம் ஈட்டித் தரக்கூடிய தொழில் இந்த சினிமா. இந்த தொழில் மீது சிறப்பு கவனம் எடுத்து திரைத் துறையில் உள்ள கந்துவட்டி பிரச்சினையை ஒழிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஒரு மேற்பார்வை குழு அமைக்க வேண்டும்” என்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த கந்துவட்டி பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத்தலைவர் பிரகாஷ் ராஜ், “இங்கு அனைவரும் கடன் வாங்கி தான் சினிமா எடுக்கிறோம். அது தவிர்க்க முடியாத ஒன்று. அதைத் திருப்பி செலுத்தவே அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் இப்படி ஒருவர் சாகும் அளவுக்கு டார்ச்சர் செய்திருப்பதை ஒத்துக்கொள்ள முடியாது. இது குறித்து அரசோ சட்டமோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்,“இது நாம் அனைவருக்கும் தெரிந்து நடந்த ஒரு தற்கொலை. ஆனால் தமிழ் திரையுலகத்தில் இப்படி தெரியாமல் எத்தனையோ தற்கொலைகள் நடந்திருக்கிறது. எத்தனையோ பேர் தங்கள் உடைமைகளை இழந்து ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். இதற்கு பைனான்சியர் மட்டுமல்ல எத்தனை பேர் காரணமாக இருக்கிறோம் என்று நம் மனசாட்சியை பார்த்து கேள்வி கேட்க வேண்டிய தருணமிது. இதற்கு நிறைய பேர் காரணமாக இருக்கிறார்கள். இன்றாவது இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 10 சதவிதம் சினிமா பிரபலங்களைத் தவிர மற்ற அனைவருமே குறிப்பாக சிறுபட தயாரிப்பாளர்கள் இது போன்ற பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள். இதற்கு தமிழ் திரையுலகம் விரைந்து ஒரு முடிவினை எடுக்க வேண்டும். இனிமேலாவது கருப்பு பணத்தை முதலீடு செய்வதோ, அதிக சம்பளம் வாங்குவதோ, அதிக பொருள் செலவு செய்வதோ இல்லாமல் நேர்மையான திரைப்படம் உருவாக அனைவரும் முன்வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படி திரைத் துறையை சார்ந்த பலரும் திரைத் துறையில் புரையோடிப்போயுள்ள கந்துவட்டி பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட அசோக் குமாரின் உடலானது அவருடைய சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இதில் விஷால் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கந்துவட்டி விவகாரம் தொடர்பாக தயாரிப்பளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விஷால் இன்று இரவு 7:30 மணிக்கு மதுரையில் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon