மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

கமாண்டர் கூறியது உண்மையல்ல: கடலோரக் காவல் படை!

கமாண்டர் கூறியது உண்மையல்ல: கடலோரக் காவல் படை!

மீனவர்களைத் தாக்கிய குண்டு இந்திய கடலோரக் காவல் படையினர் பயன்படுத்துவதுதான் என்று கமாண்டர் கூறியது உண்மையல்ல எனக் கடலோரக் காவல் படை மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ், “மீனவர்கள் கொண்டுவந்த 0.22 மிமி அளவு கொண்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல் படையினர் பயன்படுத்துவதுதான்” என்று கூறியதாக நேற்று (நவம்பர் 21) செய்தி வெளியானது.

ஆனால் இதற்கு இன்று (நவம்பர் 22) கடலோரக் காவல் படை மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்திய கடலோரக் காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமாண்டர் ராமாராவ் தெரிவித்த கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததை ராமாராவ் உறுதி செய்தார் என்ற தகவல் தவறானது. தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் கடலோரக் காவல் படையின் படகு தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும், எதையும் உறுதிப்படுத்துவோ அல்லது மறுக்கவோ என்னால் முடியாது என்றும்தான் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட தோட்டா இந்தியக் கடலோரக் காவல் படை பயன்படுத்துவதுதான் என அவர் கூறவேயில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்தும் தவறான செய்திகள் வெளியிடப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கடலோரக் காவல் படை குழுமத்தின் கூடுதல் டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் கடலோரக் காவல் படையினர் மீனவர்களைத் தாக்கியதற்கு மன்னிப்புக் கேட்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon