மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

முதல்வரிடமும் விசாரணை நடத்தப்படும்!

முதல்வரிடமும் விசாரணை நடத்தப்படும்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர், துணை முதல்வர், சசிகலா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, " அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்" என்று விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், சில வாரங்களுக்கு முன்பே விசாரணை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விவரம் தெரிந்தவர்கள் பிரமாணப் பத்திரம் வழியாக தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்காக 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன், தீபா கணவர் மாதவன் உள்ளிட்ட 70 மேற்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இதில் மருத்துவர் சரவணன் இன்று விசாரணை ஆணையத்தின் முன்பு உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். அதில்," இடைத் தேர்தல் கைரேகை விவகாரத்தில் ஜெயலலிதா இறந்த பின்னரே அவரது கைரேகை எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 22) செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி," ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் அதுகுறித்து பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க இரண்டு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அவர்களிடம் நாளை விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து முதல்வர், துணை முதல்வர், சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு," அனைவரிடமும் விசாரிப்போம்" என்றும், முழுமையாக விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக அனைவரிடமும் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று அரசுக்கு விசாரணை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon