மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

இடைத் தேர்தல் தேதி!

இடைத் தேர்தல் தேதி!

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் தேதியை அறிவிப்பது தொடர்பாகத் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை நடத்த இன்னும் இரண்டு நாட்களில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி செல்லவுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிக அளவில் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி இடைத் தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது. இதையடுத்து, கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், "டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

இடைத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பிலிருந்து இரு வழக்குகள் தொடரப்பட்டது. இதன் விசாரணையில், இந்த வழக்குகளால்தான் இடைத் தேர்தல் தாமதமாவதாக தேர்தல் ஆணையம் வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து நேற்றைய தினத்தில்," டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை. எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணியைத் தேர்தல் ஆணையம் தற்போதே தொடங்கலாம்" என்று தெரிவித்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்னும் இரண்டு நாட்களில் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் லக்கானி, தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். ஆலோசனைக்குப் பிறகு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸுக்கு முன்பு ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon