மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

அறம்: நயன்தாராவின் சேலை ரகசியம்!

அறம்: நயன்தாராவின் சேலை ரகசியம்!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அறம் படத்தில் சாம்பல் வண்ணத்தில் அவர் சேலை அணிந்திருப்பதன் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.

நயன்தாரா நடித்து வெளியான அறம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் உருவாக்கத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பங்காற்றியது எனலாம். இதில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஓம் பிரகாஷ் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பிஹைண்ட் வுட்ஸ்-க்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இப்படம் குறித்து தெரிவித்த ஓம் பிரகாஷ், “அறம் திரைப்படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகும். கதையை இயக்குநர் என்னிடம் கூறியபோது படத்திற்கான வண்ணம் சாம்பல் நிறத்தில் இருக்க வேண்டுமென நினைத்தேன். ஏனென்றால் வறட்சியான பூமியில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம் என்று தெரிந்தது. அந்த நிலப்பரப்பிற்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும் என்பதற்காக லைட்டிங் மற்றும் லென்ஸ்கள் ஆகியவற்றை தேர்வு செய்தேன். நயன்தாரா அணியும் உடைகளும் சாம்பல் வண்ணத்தில் இருக்க வேண்டுமென திட்டமிட்டு, அவருக்கு அந்த ஆடையை படத்தில் பயன்படுத்தினோம்” என்று தெரிவித்தார்.

“இப்படத்தின் படப்பிடிப்பு பகுதிகளும், சூழலும் மிகவும் கடுமையாக இருந்தது. இப்படத்தின் முக்கிய பகுதியான போர்வெல் காட்சிகளுக்கு சிறப்பு லென்ஸும், லைட்டிங்கும் பயன்படுத்தினோம். நயன்தாராவுடன் நான் பணிபுரிவது இது மூன்றாவது படமாகும். ஏற்கனவே அவர் நடித்த ஆரம்பம் மற்றும் காஷ்மோரா படங்களில் படத்தில் அவர் மெனக்கெடுவதையும் அவரது அர்ப்பணிப்பையும் நான் பார்த்துள்ளேன். இயக்குநர் கோபி நயினாரின் எழுத்தும், ஸ்கிரிப்ட்டின் மீது அவர் கொண்ட நம்பிக்கையும்தான் படத்தின் வெற்றிக்கான சாத்தியங்கள். அறம் படத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்” என்று மனம் திறந்துள்ளார் ஓம் பிரகாஷ்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon