மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

மீன்பிடித் தொழிலுக்கு ஊக்கத்தொகை!

மீன்பிடித் தொழிலுக்கு ஊக்கத்தொகை!

உலக மீனவ தினமான நவம்பர் 21ஆம் தேதியை இந்திய மீனவர்கள் மகிழ்ச்சிகரமாகவே கொண்டாடியிருப்பார்கள். ஏனெனில், இந்திய மீன்பிடித் தொழிலை வலுப்படுத்தச் சர்வதேச அமைப்பிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த மரைன் ஸ்டீவர்ட்ஷிப் கவுன்சில் (MSC) தொண்டு நிறுவனம் இந்தியாவின் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும், இத்தொழிலில் புது யுத்திகளைப் பயன்படுத்தவும் ரூ.37,25,740 வழங்கியுள்ளது. இந்நிறுவனம் உலகளாவிய நாடுகளுக்கு நிதியுதவி செய்து கடல் உணவுச் சந்தையை மேம்படுத்த பல வழிகளில் உதவி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலுள்ள உலக வன விலங்குகள் அமைப்பின் மூலமாக ’தூண்டில் மீன்கள்’ மற்றும் சூரை மீன்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மீன்வளத் துறை ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி உலக வன விலங்குகள் அமைப்பும், மத்திய அரசும் இணைந்து லட்சத்தீவு பகுதிகளில் தூண்டில் மீன்கள் மற்றும் சூரை மீன்கள் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

இந்த MSC அமைப்பானது இந்தியா மட்டுமின்றி, செனகல் நாட்டில் ஆக்டோபஸ் வளர்ப்புக்கும், சிலி நாட்டில் நண்டு வளர்ப்புக்கும், இந்தோனேசியா நாட்டில் தூண்டில் மீன்கள் வளர்ப்புக்கும், சீனாவில் க்ரே மீன்கள் வளர்ப்புக்கும் நிதியுதவி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. MSC அமைப்பின் இந்த நிதியானது சர்வதேச மீன்வள நிலைத்தன்மை நிதியின் கீழ் 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடல்வாழ் உயிரினப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர் வினோத் மலையிலேது கூறுகையில், "இந்தியாவிலுள்ள உலக வன விலங்குகள் அமைப்பின் சார்பாக உலகின் 34 நாடுகளில் 300க்கும் மேற்பட்ட வகையிலான மீன்கள் வளர்ப்புக்குச் சான்றளிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த உற்பத்தி ஒரு ஆண்டிற்கு 1 கோடி மெட்ரிக் டன்களாக உள்ளது. இது சர்வதேச அளவில் மீன் உற்பத்தியில் 12 சதவிகிதமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon