மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்:ஹர்திக் பட்டேல்

பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்:ஹர்திக் பட்டேல்

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராடிவரும் ஹர்திக் பட்டேல், தங்களது கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி சம்மதித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அதோடு, ‘பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, ஹர்திக் பட்டேல் தலைமையிலான பட்டிதர் அனாமத் ஆந்தோலன் சமிதி அமைப்பு போராடி வருகிறது. சமீபகாலமாக பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்ட ஹர்திக், இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் பேசிவந்தார். தற்போது இதில் உடன்படிக்கை ஏற்பட்டதாக அறிவித்திருக்கிறார்.

இதனால், வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14 தேதிகளில் சட்டமன்றத் தேர்தலில் பட்டேல் சமூகத்தினரின் ஆதரவு காங்கிரசுக்கு இருக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது. ”நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. ஆனால், பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு எனது ஆதரவாளர்களிடம் சொல்வேன்” என்று ஆளும் தரப்பை பயமுறுத்தியிருக்கிறார்.

”ஆட்சிக்கு வந்தால், ஒரு மாதத்தில் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதனை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது. அரசியல் சட்டம் 46ஐ பயன்படுத்தி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இணையான பிரிவில் பட்டேல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடை அளிக்க காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இது வெளியாகும்” என்றிருக்கிறார் ஹர்திக்.

இவரது பேச்சுவார்த்தையினால், காங்கிரஸ் கட்சியில் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட, அதிக வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon