மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

முதல்வருக்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்!

முதல்வருக்காக  நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா செல்வதற்கு அனைத்து வாகனங்களையும் நிறுத்தியதால் கூட்ட நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சில் இருந்த பெண் நோயாளியை ஊழியர்கள் நடந்தே அழைத்துச் சென்றனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூர் புறநகர்ப் பகுதியான நாக மங்களாவில் நேற்று(நவம்பர் 21) வளர்ச்சி திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த பின், பெங்களூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அவரின் காருக்கு முன்னும் பின்னும் காவல் அதிகாரிகள், பாதுகாப்பு வாகனங்கள்,அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் என அணிவகுத்துச் சென்றனர். அதனால் முதலமைச்சரின் காருக்கு வழிவிட அனைத்து வாகனங்களையும் கர்நாடக காவல்துறையினர் நிறுத்தி வைத்தனர்.

இதில் ஒரு பெண் நோயாளியை ஏற்றிக் கொண்டுவந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது. அதில் ஒரு பெண் நோயாளியும் அவரது கணவர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2 பேரும் இருந்தனர். வாகனங்கள் ஆங்காங்கே நின்றிருந்ததால் அதில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டு நகர முடியவில்லை.

ஆனால் 500 மீட்டர் தொலைவில் தான் அரசு மருத்துவமனை உள்ளது. இதையடுத்து பெண் நோயாளியைக் கணவரும் ஆம்புலன்ஸ் ஊழியரும் நடந்தே அழைத்துச் சென்றனர். அருகில் சாலை வெறிச்சோடிக் கிடக்க பெண்ணை கைதாங்கலாக அழைத்துச் சென்றனர்.

இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வரின் வாகனம் செல்வதற்காக நோயாளிகள், பொதுமக்கள் பாதிப்படைவதா. இதனைக் காவல்துறையினர் கண்டு கொள்ளாதது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுபற்றி மாண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதிகா கூறுகையில், ‘பெண்ணை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டது. அதன்பிறகு ஒரு ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். வாகன நெரிசலில் ஆட்டோவும் செல்ல முடியவில்லை. அருகில் 500 மீட்டர் தொலைவில் மருத்துவமனை இருந்ததால்தான் அங்கு கைதாங்கலாக அழைத்துச் செல்ல அனுமதித்தோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அந்தப் பெண்ணுக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

வீடியோ

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon