மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

திறந்தவெளியில் போனால் புகைப்படம் எடுக்கப்படும்!

திறந்தவெளியில் போனால்  புகைப்படம் எடுக்கப்படும்!

பிகார் மாநிலத்தில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை உடனடியாகத் தங்களது செல்பேசியில் புகைப்படம் எடுக்குமாறு ஆசிரியர்களுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

பிகார் மாநிலத்தில், அவுரங்காபாத், முஸாஃபர்பூர் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்கள், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களைப் பார்த்தால் உடனடியாகப் புகைப்படம் எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் புகைப்படம் எடுக்கும் பணியைப் பள்ளி முதல்வர்கள் மேற்பார்வையிட வேண்டும். ஆசிரியர்கள் காலை 5 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஷிப்ட் அடிப்படையில் புகைப்படம் எடுக்க வேண்டும். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அவுரங்காபாத்தைத் திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுபோல் புகைப்படம் எடுத்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை புகைப்படம் எடுத்தால் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் எனவும் ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது எங்களை அவமானப்படுத்தும் செயல் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜனவரி மாதம் தொடங்குகிறது. தேர்வுகளுக்கான மாணவர்களின் பதிவு இன்னும் முடிவடையவில்லை. பிகாரில் ஆசியர்களுக்குப் பாடம் எடுப்பது தவிர மாநிலத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் மேலாண்மை, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளது. தற்போது இந்த உத்தரவு ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த உத்தரவைத் திரும்ப பெற வெண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்களைக் கல்வி சாரா வேலைகளில் ஈடுபடுத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு தெரிவித்தது. சிபிஎஸ்இ அதன் பள்ளிகளுக்கு அதுபோன்ற ஒரு உத்தரவை வழங்கியது.

ஜனவரி மாதம் ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி அவர்களது நேரத்தை வீணடிப்பதைப் பள்ளிகள் நிறுத்த வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட செயலாளர்கள் அடங்கிய ஆய்வுக் குழு பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon