மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

சுகாதார திட்டத்திற்கு ரூ.2,685 கோடி!

சுகாதார திட்டத்திற்கு ரூ.2,685 கோடி!

தமிழக சுகாதார திட்டம்-2க்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.2,685 கோடி நிதி வழங்க உலக வங்கி முதல்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்ஆர்பி) புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 556 சிறப்பு டாக்டர்கள், அமைச்சுப் பணியாளர்களான 175 இளநிலை உதவியாளர்கள், 49 தட்டச்சர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: மனிதவளம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக விளங்கி தரமான இலவச மருத்துவ சேவைகளை மக்களுக்குச் சிறப்பான முறையில் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளது. இவ்வாரியம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10,858 டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள், 9,533 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் உட்பட 23,466 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 1,748 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 96 சதவீத பணியிடங்களில் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 4 சதவீத பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை உலகத் தரத்துக்கு மேம்படுத்த, ஜப்பானிய வளர்ச்சி நிறுவனம் 2016-ம் ஆண்டு ரூ.1,634 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழக சுகாதார திட்டம்-2க்கு சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொற்றா நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு பன்னாட்டு வளர்ச்சி நிறுவனமான உலக வங்கி ரூ.2,685 கோடி நிதி வழங்க முதல்கட்ட ஒப்புதலை அண்மையில் அளித்துள்ளது. இன்றைக்குப் பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவை ஆற்றுவதையும், தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவிகளை அளிப்பதையும் முக்கிய கடமையாக கருத வேண்டும். மருத்துவத் துறையில், தன்னலமற்ற சேவை ஆற்றுவதும், தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவிகள் அளிப்பதும், டாக்டர்களின் முக்கிய கடமையாகும். யாருக்கும் கிடைக்காத பெருமை, டாக்டர்களுக்கே கிடைக்கிறது. உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் காப்பாற்றும் போது, அவர்கள் டாக்டர்களை பார்த்து, 'இறைவன் போல் எங்களைக் காப்பாற்றினீர்கள்' என, பெருமையோடு சொல்கின்றனர். மக்களுக்கு முழு மனதோடு பணியாற்றி, நாட்டிற்கும், வீட்டிற்கும், டாக்டர்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் பேசினார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon