மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

கீரின் கார்டு வைத்திருக்கும் பிச்சைக்காரர்கள்!

கீரின் கார்டு வைத்திருக்கும் பிச்சைக்காரர்கள்!

ஹைதராபாத்தில் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரு பெண்கள் ஆங்கிலத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைப் பார்த்து போலீஸ்காரர்கள் வியந்தனர்.

ஹைதராபாத்தில் சர்வதேச தொழில்முனைவோர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில், பங்கேற்க அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா 28ஆம் தேதி வருகிறார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, 5 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டினை ஒட்டி, பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக ஹைதராபாத் இருக்க வேண்டும் என்பதற்காக, பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். செர்லாபள்ளி சிறையில் உள்ள ஆனந்தா ஆசிரமத்தில் பிச்சைக்காரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுவரை, 200க்கும் மேற்பட்ட பெண்களும், 150க்கும் மேற்பட்ட ஆண்களும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (நவம்பர் 20) லங்கார் தர்ஹா அருகில் பிச்சை எடுத்தவர்களை அப்புறப்படுத்தியபோது இரு பெண்கள் ஆங்கிலத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், பர்ஜோனா (50) என்ற பெண் லண்டனில் எம்.பி.ஏ. முடித்து அங்குள்ள வங்கியில் கணக்காளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு அமெரிக்காவில் சொந்தமாக வீடுகளும், கார்களும் உள்ளன. மற்றொருவர் ரபியா பசீரா (44) அமெரிக்காவில் கீரின் கார்டு (குடியுரிமை)வாங்கியவர். ஏராளமான சொத்துக்கள் இருந்தபோதிலும் தனது சகோதரர் ஏமாற்றிவிட்டதால் விரக்தியில் இருந்துள்ளார். முஸ்லிம் மதபோதகர் ஒருவர் அளித்த அறிவுரையின்படி, இரு பெண்களும் மன அமைதிக்காகப் பிச்சை எடுக்க ஹைதராபாத்துக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து செர்லாபள்ளி சிறைச்சாலை கண்காணிப்பாளர் அர்ஜுன் ராவ் கூறுகையில், “இந்த தர்க்கா மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணமடைய செய்யும் சக்தி உடையது என்ற நம்பிக்கை நிலவுவதால் இவர்கள் இங்கே வந்துள்ளனர். விசாரணையில் அவர்கள் குறித்து தெரியவந்த பிறகு, இருவரையும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon