மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துக!

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துக!

’இனிவரும் மாதங்களில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க, தமிழகத்தில் கரும்பு கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும்’ என்றிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழகத்தின் வட மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள், அவற்றை ஆந்திராவிலுள்ள சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலத்திலுள்ள சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர்க்க தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, இன்று (நவம்பர் 22) அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

“தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படும் கரும்புக்கு, டன்னுக்கு ரூ.3150 முதல் ரூ.3250 வரை கொள்முதல் விலையாக வழங்க ஆந்திர சர்க்கரை ஆலைகள் உறுதியளித்துள்ளன. அது 15 நாட்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில் தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான சர்க்கரை ஆலைகளில் இரு வாரங்களுக்கு முன்பே அரவை தொடங்கிவிட்ட நிலையில், இன்றுவரை கரும்புக்கான கொள்முதல் விலையை ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை.

நடப்பாண்டில் கரும்பு கொள்முதல் விலை ரூ.2550 என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கடந்த காலங்களில் தமிழக அரசு அறிவித்த ரூ.650 ஊக்கத்தொகை சேர்த்து ரூ.3,200 என்ற விலை கொடுத்தால் மட்டுமே, உழவர்களுக்கு ஓரளவாவது கட்டுபடியாகும். தமிழக அரசு கடந்த இரு ஆண்டுகளாக அறிவித்த ரூ.550 ஊக்கத்தொகை சேர்த்து வழங்கினால் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,100 கிடைக்கும். ஆனால், இதைவிட குறைவான கொள்முதல் விலையை அறிவிக்க தமிழக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. உழவர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டுமானால் டன்னுக்கு குறைந்தது 4,000 ரூபாயாவது வழங்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் செய்த வகையில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1454.56 கோடி, 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.198.44 கோடி, இரு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ரூ.48.35 கோடி என மொத்தம் ரூ.1701.35 கோடி பாக்கி வைத்துள்ளன. கடந்த மாதம் 14ம் தேதி பேச்சு நடத்திய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தீபஒளி திருநாளுக்குள் நிலுவைத்தொகையில் குறிப்பிட்ட அளவு உழவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. மீண்டும் வரும் 26ம் தேதி பேச்சு நடத்தப்படவுள்ள நிலையில், அதனால் பயன் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. அதனால் தான் உழவர்கள் ஆந்திரத்திற்கு கரும்பை அனுப்பும் முடிவை எடுத்துள்ளனர்.

2017-18ம் ஆண்டு அரவை பருவத்தில், தமிழகத்தில் 65 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 65 லட்சம் டன் கரும்பைக் கொண்டு 6 லட்சம் டன் சர்க்கரையை மட்டுமே உற்பத்தி செய்யமுடியும். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.5 லட்சம் டன் சர்க்கரை தமிழ்நாட்டிற்குத் தேவைப்படும் நிலையில், நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை 4 மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதன்பின் மிகக் கடுமையான சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படும்” என்று இதில் கூறப்பட்டுள்ளது.

’இதைத் தவிர்க்க, சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக பெற்றுத்தருவதுடன், கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4000 ஆக உயர்த்த வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon