மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய மைத்ரேயன்

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய மைத்ரேயன்

அதிமுகவில் தனித்தனியாகச் செயல்பட்டுவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் பன்னீர்செல்வம் அணி இணைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இரு அணியைச் சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாகவும் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. முகநூலில் நேற்று பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் பொதுவெளியில் விவாதிக்கக்கூடாது என்று பதிலளித்திருந்தார்.

இதேபோல், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும், ”மைத்ரேயனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தம்பிதுரைக்கு முகநூல் பதிவு மூலம் மைத்ரேயன் இன்று (நவ.22) பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூலில், “நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனால் அணிகள் இடையே உள்ளக் கருத்து வேறுபாடு வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon