மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

இலவச லேப்டாப் வழங்கப் பணம் வசூலித்த ஆசிரியர்!

இலவச லேப்டாப் வழங்கப் பணம் வசூலித்த ஆசிரியர்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசின் இலவச லேப்டாப்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டன.

அப்போது, மாணவர்களுக்கு லேப்டாப், வழங்குவதற்குப் பள்ளி நிர்வாகம் ரூ.50 முதல் ரூ.250 வரை ஒவ்வொரு பாடப்பிரிவு மாணவ, மாணவியர்களிடம் ஆசிரியர் ஒருவர் வசூலிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

ரூ.250 பணம் கொடுத்து லேப்டாப் வாங்கிய மாணவன் ஆகாஷ் கூறுகையில், “கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த 130 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. அப்போது வாகனக் கட்டணம், நிகழ்ச்சி செலவு எனக் கூறிப் பணம் வசூலித்தனர். அதுவும் கணினிஅறிவியல் பிரிவு மாணவர்களிடம் ரூ.250, வணிகவியல் மாணவர்களுக்கு ரூ.50 என வசூலித்தனர். மேலும், இதுகுறித்து நான் கேட்டதற்கு, ஆசிரியரிடம் மரியாதைக் குறைவாக பேசியதாக என்னிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு பல மணிநேரம் கழித்துதான் லேப்டாப் தந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடம் பணம் வாங்கியது ஏன் என்பதற்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் நாகராஜன் விளக்கமளித்திருக்கிறார். “இப்பள்ளியில் கடந்த ஆண்டு 130 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும்போது, லேப்டாப் வழங்கும் விழா மற்றும் வண்டி வாடகை போன்ற பள்ளி செலவுக்காக, அனைத்து மாணவர்களிடமும் ரூ.50 வசூல்செய்ய பெற்றோர் ஆசிரியர் கழக ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றி வசூல்செய்தோம். மேலும், கணினி அறிவியல் மற்றும் கம்யூட்டர் வணிகவியல் மாணவர்களிடம் கடந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும்போது அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையான ரூ.200-ஐ வசூலிக்க மறந்துவிட்டோம். அந்தத் தொகையைத் தற்போது வசூலித்து கருவூலத்தில் செலுத்தியிருக்கிறோம்” என்று கூறிய அவர், லேப்டாப் வழங்குவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. வேண்டாத சில நபர்கள் பள்ளி நிர்வாகத்தைப் பற்றி வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி செந்தில் வேல்முருகன் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon