மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

பிணவறையில் தமிழ் சினிமா: உடையும் உன்னதங்கள்!

பிணவறையில் தமிழ் சினிமா: உடையும் உன்னதங்கள்!

சசிகுமாரின் மைத்துனர் அசோக் குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை இது கொலை என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், அது அன்பு செழியனின் கந்து வட்டி பிரச்சினையால் மட்டும் நடைபெற்ற கொலையா என்றால் இல்லை. அசோக் குமாருக்கு நெருக்கமான சிலரிடம் பேசியதிலிருந்து அவரது மரணம் பற்றிய வேரொரு பரிமாணம் கிடைக்கிறது. மேலும் சற்று ஆராயும்போது கந்து வட்டி பற்றிய ஆவேசமான குரல்களில் அமுங்கிப்போகும் வேறு சில யதார்த்தங்களும் தெரியவருகின்றன.

சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷனில் அசோக்குடன் பணிபுரிந்த கேஷியர் (கணக்காளர்) சீனு தனியாக ராயப்பேட்டை பிணவறையில் நேற்று (21.11.2017) இரவு உட்கார்ந்திருந்தார்.

9.30 மணியளவில் முதல் தகவல் அறிக்கை இரவே கிடைத்துவிடுமா அல்லது காலை வரை காத்திருக்க வேண்டுமா என்ற விவாதம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இவர் மட்டும் இங்கே இருந்தார். கடந்த ஒரு வாரமாக அசோக்கின் மனநிலை எப்படியிருந்தது என அவரிடம் விசாரித்தபோது மடைதிறந்த வெள்ளம்போலத் தனது ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்தார். அவர் சொன்னதை அவரது வார்த்தைகளிலேயே கேளுங்கள்:

“கொஞ்ச நாளாதான் இப்படி இருந்தான். என்ன ஆனாலும் சசியை நல்லா பாத்துக்கணும் சரியாண்ணே அப்படிம்பான். சும்மா இரு, எல்லாம் சீக்கிரம் சரியா போயிரும்னு சொன்னோம். எங்களுக்கே எப்பவும் தைரியம் சொல்றவன், ஏதோ பேசுறான்னு பாத்தா இப்படி ஆகிடுச்சு. கொடி வீரன் படத்தை ரிலீஸ் பண்றதுக்கான வேலையா இருந்தான். திடீர்னு பணத்தை செட்டில் பண்ணிட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்கன்னு ரெட் கார்டு போட்டுட்டாங்க. இது நடக்கும்னு முன்பே தெரியும். எப்படியாவது படத்தை ரிலீஸ் பண்ணி எல்லா கடனையும் அடைச்சிடலாம்னு நம்பிக்கையா இருந்தான். ஆனால், பணம் குடுக்குறேன்னு சொன்ன எல்லாரும் கடைசி நேரத்துல கையை விரிச்சிட்டாங்க. எந்த வழியும் இல்லைன்னு சொல்லிக்கிட்டே இருந்தான்.

கடைசியா முந்தாநாள் நைட்டு (20.11.2017) ஆஃபீஸ்ல அவனைப் பாத்துட்டு கிளம்பிப் போயிருக்காங்க. காலைல 7 மணி வரைக்கும் ஆஃபீஸ்லதான் படுத்திருந்தானாம். அப்பறம் கிளம்பிப்போனவன் யார் கண்ணுலயும் படல. யார் ஃபோனுக்கும் வரல. அதோட பசங்க வந்து சாயங்காலம் ஆஃபீஸைத் திறக்கும்போதுதான் இவனைப் பாத்திருக்காங்க. எல்லாம் இருக்கும்போது கூடவே இருந்தாங்க. பணம் இல்லைன்னதும் எல்லாரும் போய்ட்டாங்களேண்ணே. பணம் இல்லைன்னா மரியாதைகூட குடுக்கமாட்டேங்கிறாங்க. சினிமா ஏன் இவ்வளவு மோசமா போயிடுச்சுன்னு பொலம்பிக்கிட்டே இருப்பான். அப்ப இருந்தா மாதிரி இப்பவும் தனியா தான் இருக்கான். அதேமாதிரி நான் மட்டும்தான் அவன்கூட இருக்கேன்...”

ஈசன் திரைப்படத்தின்போது சசிகுமாரும் அத்தனை பெரிதாக அந்தத் தோல்வியை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அப்போது வாங்கிய கடன் தொகை ரூபாய் 18 கோடி வட்டிபோட்டு, அதற்கொரு குட்டி போட்டு இப்போது அசலையும் மிஞ்சி வட்டியைக் கட்ட முடியுமா என்ற மலைப்பான நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

அன்பு செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதற்காக மற்ற யாரும் கம்பெனி புரொடக்‌ஷனுக்குக் கடன் தரக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவினால்தான் தற்கொலைக்குச் செல்லும் அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகியிருகிறார் அசோக் குமார். கடன் தரத் தயாராக இருந்தவர்களெல்லாம் தொடர்ந்து கைவிரிப்பதும், முதலில் அந்த செட்டில்மெண்டைக் கொடுத்துவிட்டு பிறகு வாருங்கள் எனத் திருப்பியனுப்பியதும் ஆறு மாத காலமாக நடந்துவந்திருக்கிறது. அன்பு செழியன் கொடுத்த டார்ச்சருடன் இதுவும் சேர்ந்து அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியிருப்பதாகத் திரையுலகமே குற்றம் சாட்டுகிறது. ஆனால், பெயர் சொல்லி எதிர்கருத்தை முன்வைக்க ஒருவருக்கும் மனம் வரவில்லை.

மரணம் உணர்த்தும் உண்மைகள்

சினிமா என்ற ஊடகத்தை மிகப் பெரியதாக நினைத்துத் தலையில் கிரீடத்தை வைக்கும்போதெல்லாம் இப்படியொரு சம்பவம் அதைத் தட்டிவிட்டுச் செல்கிறது. சினிமாவில் இருப்பவர்களும் சாதாரண மனிதர்களைப் போலவே என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. மைக் கிடைத்தால் புரட்சி பேசும் பலர் இந்த மரணத்துக்கு நேரில் வரக்கூட மாட்டார்கள் என்பது சினிமா மீதான மாயையை உடைக்கிறதல்லவா?

இவர் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்வார் என நினைத்தவர்களால் குற்றம் செய்ததாகச் சொல்லப்படுபவரின் பெயரைக்கூடச் சொல்ல முடியாத நிலை இருப்பதை இந்த ஒரு சம்பவம் நிகழ்த்தியிருக்கிறதல்லவா?

ஒரு நாள் சம்பளம் பிடித்தால் அந்த மாத பட்ஜெட்டில் துண்டுவிழும் எனும் நிலையில் சாதாரண மனிதன் இருப்பது போலவே, ஒரு நாள் படம் தள்ளிப்போனால் அதற்கு முதலீடு செய்த அத்தனைக் கோடியும் கற்பூரமாய் காணாமல் போகுமே அதை எடுக்க இன்னும் எத்தனைப் படம் எடுக்கவேண்டும் என்ற நிலையில்லாத வாழ்வாகத் தான் சினிமா இருக்கிறதென்பதை இந்த மரணம் உணர்த்தியிருக்கிறதல்லவா?

கண்ணாடிபோலப் பளபளவெனக் காட்டப்படும் சினிமாவுக்குப் பிறகு, இத்தனை இறுக்கம் இருக்கிறதென்பது தெரியாமலிருப்பதே இந்த மாதிரி கந்து வட்டிக் கும்பல்களின் ஆதிக்கம் தொடர்வதற்குக் காரணம். அசோக் குமாரின் கடிதத்தில் இருப்பதுபோல அதிகாரம், அரசியல்வாதிகள் கையிலிருப்பதால் ஒருவரை ஒன்றும் செய்ய முடியாது என்பது அந்த காலத்துக் கதை. இதோ ஹாலிவுட்டின் பிதாமகன்களில் ஒருவராக வீற்றிருந்த ஹார்வே வெய்ன்ஸ்டீனை ஹாலிவுட் நடிகைகளின் ஒற்றுமை தரதரவென இழுத்து வந்து, அவருடைய நிஜ முகத்தை உலகுக்கே காட்டியிருக்கிறார்களே. இதைவிடவா ஒற்றுமைக்குச் சிறந்த உதாரணம் தேவை?

அடாவடித்தனத்தின் மூலம் தனது சுயத்தை மட்டும் வளர்த்துக்கொள்ளலாம் என நினைப்பவர்கள் இருக்கும்வரை தமிழ் சினிமாவும் அசோக் போல தனியே பிணவறையில் படுத்திருக்கவேண்டியதுதான்.

வழக்கும் தலைமறைவும்*

இந்நிலையில் இன்று (22.11.2017) காலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அன்பு செழியன் மீது இ.பி.கோ. 306இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் அன்பு செழியன் தலைமறைவானதால் அவரைப் பிடிக்கத் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தகவல் அறிக்கையின் நகல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு அசோக் குமாரின் உடல் கூறாய்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளது.

இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், கரு.பழனியப்பன், நடிகர் பரணி, கம்பெனி புரொடக்ஷன் நிறுவன ஊழியர்கள் என ஒரு சிலர் மட்டுமே வந்திருந்து அசோக் குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். கூடிய விரைவில் அன்பு செழியனைப் பிடித்து விசாரிக்க வேண்டும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க திரைத் துறை சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon