மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!

தமிழகத்தில் 100 அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (நவம்பர் 21) தெரிவித்தார்.

சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் நேற்று புதிய கட்டிடங்களை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மற்றும் பல்லாவரம் தெரசா பள்ளி உட்பட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2,676 விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இந்த விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, தென்சென்னை முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நார்வே, அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, 25 பேர்கள் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். ரூ.3 கோடி செலவில் அந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வளர்ச்சி, கல்வி, புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள். இதற்காக ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவிடப்படும். 15 நாட்களுக்கு மாணவர்கள் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்” எனக் கூறினார்.

தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ் 1 படிக்கும் 15 மாணவர்களும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 15 மாணவர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன்படி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், பிளஸ் 1 மாணவர்களுக்கு 20,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடியே 42 லட்சம் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், மொத்தம் 960 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon