மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

விவசாயிகள் சாலை மறியல்!

விவசாயிகள் சாலை மறியல்!

தூத்துக்குடி அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையினால், வடகால் மற்றும் தென்கால் மூலம் 53 குளங்களிலிருந்து 46,107 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவருகிறது. ஆனால் ஸ்ரீவைகுண்டம் வடிகாலில் பலமுறை தண்ணீர் திறந்தும் கடைசி குளமான கோரம்பள்ளம், பெட்டைக்குளத்துக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தண்ணீர் தரப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிவந்தனர். இது தொடர்பாகப் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை.

இந்நிலையில், குளங்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள ஸ்பிக் நகர், அத்திமரப்பட்டி விலக்கில் நேற்று (நவம்பர் 21) விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 1.15க்குத் தொடங்கிய போராட்டம் 3 மணி வரை தொடர்ந்தது. இந்த போராட்த்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து ஸ்ரீ வைகுண்டம் பாசன அதிகாரி ரகுநாதன் அங்கு வந்தபோது அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த விவசாயிகள் மறுத்துவிட்டனர்.

பின்பு நெல்லையிலிருந்து தூத்துக்குடி வந்த தாமிரபரணி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், ஒரு வாரத்துக்குள் தண்ணீர் திறந்துவிடப்படும் என எழுத்துபூர்வமாக உறுதிமொழி அளித்ததையடுத்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இப்போராட்டம் 2 மணி நேரம் வரை நீடித்ததால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon