மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

ஸ்ட்ரெச்சர்: சங்கிலியால் பிணைத்துள்ள மருத்துவமனை!

ஸ்ட்ரெச்சர்: சங்கிலியால் பிணைத்துள்ள மருத்துவமனை!

பேனா, தண்ணீர் குடிக்கும் டம்ளர் போன்றவற்றை நூலில் கட்டி வைத்திருப்பார்கள். ஏனென்றால் பாதுகாப்பாக வைத்திருக்கவும் யாரும் எடுத்து செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு நூலிலோ அல்லது கயிற்றிலோ கட்டி இருப்பார்கள். ஆனால் இங்கு மருத்துவமனையில் நோயாளிகளை அவசரத்துக்கு அழைத்துச்செல்லும் ஸ்ட்ரெச்சரை சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஸ்ட்ரெச்சர் மற்றும் தள்ளுவண்டிகளை, மருத்துவமனை ஊழியர்கள் சங்கிலியால் பிணைத்து வைக்கின்றனர். இதனால் நோயாளிகள் அவதிப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெரு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருபவர் உஷா (38). இவர் நேற்று அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மாநகர பேருந்து உஷாவை தோள்பட்டை பகுதியில் உரசியதில் அவர் பேருந்தில் சிக்கினார். பேருந்து அவரை சிறிது தூரம் இழுத்துச் சென்ற பிறகு திடீரென்று பிரேக் போட்டதால் விலா எலும்புகள் உடைந்து காயம் அடைந்துள்ளார். பின்னர் உடனடியாக அவர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மருத்துவமனையில் அவரை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் தள்ளுவண்டியைத் தராமல் ஊழியர்கள் இழுத்தடித்துள்ளனர். இதனால் சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஸ்ட்ரெச்சர் வண்டிகளைச் சங்கிலியால் பிணைத்து யாருக்கும் உபயோகப்படாமல் ஊழியர்கள் வைத்துள்ளதாகவும், பணம் தரும் நபர்களுக்கு மட்டும் பயன்படுத்துவதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டினர். நீண்ட அலைக்கழிப்புக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட உஷாவை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் பொதுமக்கள் அடிக்கடி இது போன்று விபத்தில் சிக்கிக்கொள்வதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon