மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

பல்கலை சான்றிதழில் சல்மான் கான் புகைப்படம்!

பல்கலை சான்றிதழில் சல்மான் கான்  புகைப்படம்!

ஆக்ரா பல்கலைக் கழகம் மூலம் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் புகைப்படங்களுக்குப் பதிலாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாலிவுட் நடிகர் சல்மான் கான் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பீம்ராவ் அம்பேத்கர் ஆக்ரா பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிக் கவுரவிக்கவுள்ளார்.

இந்நிலையில் 17028700 * என்ற ரோல் எண் கொண்ட மதிப்பெண் சான்றிதழில் சல்மான் கான் படம் இடம் பெற்றுள்ளது. இது ஆக்ரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அமராதா சிங் மெமோரியல் டிகிரி கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டைச் சேர்ந்த மாணவர் ஒருவருடையதாகும்.

இதுபோன்று ஆக்ரா பல்கலைக்கழகத்தில் வழங்கிய மற்றொரு மதிப்பெண் சான்றிதழில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும் மற்றொரு மாணவருக்கு அவருடைய பெயருக்கு பதிலாக அம்பேத்கரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 7.2 லட்சம் மாணவர்கள் 2016-17 ஆண்டில் கல்வி பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனின் புகைப்படம் உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ் ஒன்றில் அச்சிடப்பட்டு பின்பு மாற்றம் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon