மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

ஜெ.வுக்கு திதி: தினகரன் ஆதரவாளர்களுக்குத் தடை!

ஜெ.வுக்கு திதி: தினகரன் ஆதரவாளர்களுக்குத் தடை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாதந்தோறும் போயஸ் கார்டன் இல்லத்தில் திதி கொடுக்கப்படுவதுண்டு. இந்த மாதம் அந்தச் சடங்கைச் செய்வதற்காக தினகரன் ஆதரவாளர்கள் வந்தபோது காவல் துறை அனுமதி மறுத்ததால் காவல் துறையுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா வசித்துவந்தார். சசிகலா சிறை சென்ற பிறகு வேலையாட்களைத் தவிர அங்கு யாரும் வசிக்கவில்லை. போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது போயஸ் கார்டன் இல்லத்தை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நிர்வகித்துவருகின்றனர் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் வருமான வரித் துறை சோதனை நடந்தது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 22) காலை தினகரன் தரப்பிலிருந்து ஜெயலலிதாவுக்கு மாதத்திற்கு ஒருமுறை கொடுக்கப்படும் திதிக்காக புரோகிதர்கள் போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு வருகை தந்தனர். ஆனால் அதற்கு அனுமதி மறுத்து போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு தினகரன் ஆதரவாளர்கள் அதிகளவில் குவிந்தனர். தொடர்ந்து காவல் துறையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல், வி.பி.கலைராஜன் ஆகியோர் சிறிது நேரத்தில் அங்கு வந்தனர். தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டு காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், "மாதாமாதம் ஜெயலலிதாவுக்கு செய்யும் பூஜையை தற்போது வருமான வரித் துறை சோதனையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. போயஸ் கார்டனுக்குள் எங்களைக் கூட விட வேண்டாம்,புரோகிதர்களையாவது உள்ளே விடுங்கள் என்று அனுமதி கேட்டோம், ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசே காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon