மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

விமான நிலையங்களில் ஆதார் மூலம் சோதனை!

விமான நிலையங்களில் ஆதார் மூலம் சோதனை!

இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஆதார் எண் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளும் திட்டத்தை 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த இந்திய விமான ஆணையம் திட்டமிட்டுள்ளது.

டிஜி யாத்ரா என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் முதல் கட்டமாக, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் விஜயவாடா விமான நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படும். இதையடுத்து, மற்ற விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பயணிகள் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தங்களது ஆதார் எண்ணை அளிக்க வேண்டும். இதனால், பயணிகளின் அனைத்து விவரங்களும் விமான நிலையத்தில் பதிவு செய்யப்படும். அதனடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்படும். பயணிகள் விமான நிலையத்துக்குள் நுழையும்போது தங்களது 'பயோமெட்ரிக்' அடையாளங்களை பதிவு செய்தவுடன், முன்பதிவு செய்த விமான எண்,புறப்படும் நேரம், முகவரி, டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் ஸ்கீரினில் தெரியவரும். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டு பயணிகளை அனுமதிப்பார்கள். இதனால், அடையாள அட்டை, டிக்கெட் பேப்பர் எடுத்து வருதல், போர்டிங் பாஸ் பெறுதல் போன்றவை தேவையில்லை.

“பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ஆதார் எண்ணை அளித்தால், அனைத்துச் சோதனைகளுக்கும் ஆதார் எண் போதுமானது. விமான நுழைவு வாயில், இ-கேட், ஆகியவற்றில் ஆதார் தொடர்பான பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்தல் போதுமானது.விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின் இ-கேட் திறந்து பயணிகள் செல்ல அனுமதிக்கும்” என இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொகாபத்ரா தெரிவித்துள்ளார்.

இது பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆறு மாதங்களாக விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விமான பயணத்தை எளிதாக்குவதற்காகவும், குறிப்பாக அடிக்கடி விமான பயணம் செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும் வகையிலும் இது கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon