மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

போக்குவரத்துத் துறையை மீட்கவேண்டும்!

போக்குவரத்துத் துறையை மீட்கவேண்டும்!

நஷ்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்துத் துறையை மீட்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழகத்தில் மக்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகளில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 8 கோட்டங்களில் 325 பணிமனைகள் மூலம் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், அலுவலக அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். ஆனால் நான்கு, ஐந்து பேருந்துகள் வைத்து நடத்தும் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணம் மூலம் லாபம் பெறுகின்றனர். ஆனால் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்துத் துறைக்கு ஏன் சுமார் 18 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் உள்ளது” என்று விஜயகாந்த் இன்று (நவ.22) விடுத்துள்ள அறிக்கையில், குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் கடனிற்காக ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி கட்டும் அவல நிலையில் போக்குவரத்துத் துறை செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக போக்குவரத்து துறையில் உள்ள பேருந்துகளின் மூலம் சுமார் ரூபாய் 5 ஆயிரத்து 300 கோடி வருவாய் ஈட்டப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், “இதில் டீசலுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 100 கோடி, உதிரி பாகங்களுக்கு ரூபாய் 110 கோடி, சுங்கச் சாவடிகளுக்கு கட்டணமாக ரூபாய் 3 கோடி 50 லட்சம், விபத்து இழப்பீட்டிற்காக ரூபாய் 50 கோடி, போக்குவரத்துத் துறையின் கடனுக்காக வட்டி ரூபாய் 600 கோடி செலவாகிறது. பணப் பற்றாக்குறையால், பேருந்துகளுக்காக உதிரிப் பாகங்கள் வாங்கும் செலவிற்காக 325 பணிமனைகளில், சுமார் 286 பணிமனைகளும் மற்றும் பெரும்பாலான அரசு பேருந்துகளும் அடமானம் வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் தலைமைக் கட்டிடமும் இடமும் அடமானம் வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு போக்குவரத்துத் துறை தொடர்ந்து செயல்பட ரூபாய் 6 ஆயிரம் கோடி நிதியுதவியாக ஐந்து ஆண்டுகளில் வழங்கியுள்ளது. மேலும் தொழிலாளர்களின் வைப்பு நிதியையும் செலவழித்து உள்ளனர் என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

போக்குவரத்துத் துறையில் 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதற்குத் தகுதியற்றவையாகவும், போக்குவரத்துத் துறை கட்டுமானங்கள் பெரும்பாலானவை பழுதடைந்தவையாகவும் உள்ளன என விமர்சித்துள்ள அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்துத் துறையை ஆய்வு செய்ததாகத் தகவல்கள் ஏதுமில்லை.

நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறையை வல்லுநர் குழு கொண்டு ஆய்வு செய்து, ஏன் அரசு நடத்தும் பேருந்துகளில் மட்டும் நஷ்டம் அடைகிறது என்பதை அறிய வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் உள்ள ரூபாய் 18 ஆயிரம் கோடி கடனை அடைக்க உடனே செயல்திட்டம் தீட்ட வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon