மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

அதிமுக கிளைச் செயலாளர் போராட்டம்!

அதிமுக கிளைச் செயலாளர் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்லும் வழியில் அதிமுக கிளைச் செயலாளர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திவருகிறார்.

தூத்துக்குடியில் இன்று (நவம்பர் 22) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் செல்கின்றனர். விமான நிலையத்திலிருந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடை அமைக்கப்பட்டுள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் செல்லும் வழியில் மரலன்மடம் என்ற இடத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி வடக்குகாரசேரியை சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர் தங்கபாண்டி என்பவர் போராட்டம் நடத்திவருகிறார்.

தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை மேலிருந்து கீழே போட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை ஆய்வு நடத்தி ஆலையை மூடுவதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இல்லையெனில் கீழே குதித்துத் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவருகிறார்.

2014இல் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது இவர் தன் கையைக் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது உடலை வருத்திக்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது என்று தங்கபாண்டிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றையும் அவர் கீழே போட்டுள்ளார்.

அப்பகுதியில் குவிக்கப்பட்ட போலீசார் அவரிடம் கீழே இறங்குமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், தங்கபாண்டியனோ ஆலையை மூட நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடும் செய்தி வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon