மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

முறைப்படி தொடங்கும் விசாரணை!

முறைப்படி தொடங்கும் விசாரணை!

ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மம் குறித்த விசாரணையை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி இன்று சென்னை எழிலகத்தில் முறைப்படி தொடங்கவுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்ததையடுத்து, அவரது மரணத்தில் அடுக்கடுக்காகப் பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தேகம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அணிகள் இணைவுக்கு ஓ.பி.எஸ். அணி வைத்த நிபந்தனையை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமனம் செய்யப்பட்டார்.

மூன்று மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இரண்டு முறை விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு பிறகு தாமதமானது. இதையடுத்து தொடங்கிய விசாரணையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விவரம் தெரிந்தவர்கள், 22ஆம் தேதிக்குள் விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் வடிவில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து ஜெயலலிதா கைரேகை குறித்து சந்தேகம் எழுப்பிய திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன், தீபா கணவர் மாதவன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆனுார் ஜெகதீசன் உள்ளிட்டோர் விசாரணை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். சுமார் 70க்கும் மேற்பட்ட கடிதங்களும் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சரவணனுக்கு மட்டும் விசாரணை ஆணையம் இன்று (நவம்பர் 22) ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. அதில் புகார் குறித்து உரிய ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்று சென்னை எழிலகத்திலுள்ள கலச மகாலில் விசாரணைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அறையில் விசாரணை தொடங்கவுள்ளது. முதலாவதாக காலை 10.30 மணியளவில் மருத்துவர் சரவணன் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். தொடர்ந்து நடைபெறவுள்ள விசாரணையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சசிகலா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள் ஆகியோரும், பல்வேறு முக்கிய தலைவர்களும் விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே, இவர்களை விசாரிக்க கூடுதல் அதிகாரம் கேட்டு அரசுக்கு, விசாரணை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

விசாரணையின்போது மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோவை ஆணையத்திடம் சமர்ப்பிப்போம் என்று தினகரன் கூறியுள்ள நிலையில், அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon