மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

தோட்டா எங்களுடையதுதான்: கமாண்டர்!

தோட்டா எங்களுடையதுதான்: கமாண்டர்!

‘மீனவர்கள் மீது சுடப்பட்டது இந்தியக் கடலோரக் காவல்படையின் துப்பாக்கி குண்டுதான்’ என்று கமாண்டர் ராமாராவ் நேற்று (நவம்பர் 21) கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 13ஆம் தேதி ராமேஸ்வர மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பிச்சை, ஜான்சன் ஆகிய இரு மீனவர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் தங்கள் மீது தாக்கப்பட்ட குண்டு ஒன்றையும் எடுத்து வந்தனர்.

அப்போது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கடலோரக் காவல்படை மறுப்புத் தெரிவித்தது. இதைதொடர்ந்து ராமேஸ்வரத்தில் கடலோரக் காவல் படையினரைக் கைது செய்யக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் கடலோரக் காவல்படை மன்னிப்புக் கேட்டதுடன், மீனவர்களுக்கும் காவல்படையினருக்கும் இடையே நட்பு ஏற்பட மாதந்தோறும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே சென்னையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்தவில்லை. மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகப் பயன்படுத்தப்பட்ட ரப்பர் தோட்டாக்கள் இந்தியக் கடற்படை பயன்படுத்தும் வகை அல்ல. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார். தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நிர்மலா சீதாராமனின் கருத்தையே தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று தங்கச்சிமடத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ், “மீனவர்கள் கொண்டுவந்த 0.22 மிமி அளவு கொண்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையினர் பயன்படுத்துவதுதான்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ரப்பர் குண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதால் மத்திய அமைச்சர் மறுத்திருப்பார். இதுதொடர்பாக விசாரணை நடத்தச் சென்னையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றும் விளக்கமளித்துள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon