மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

‘ஈகோ அரசியல்’- பத்மாவதி சர்ச்சைக்கான அடிப்படைக் காரணம்!

‘ஈகோ அரசியல்’- பத்மாவதி சர்ச்சைக்கான அடிப்படைக் காரணம்!

வரலாற்று கதைகளில் உண்மைகள் இருக்கும்பட்சத்தில் அதை இஸ்லாமிய சமூகத்தினர் பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று பத்மாவதி விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆஸம் கான் தெரிவித்த கருத்து மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. பத்மாவதி படத்துக்கு எதிராக கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் நடத்திவரும் போராட்டத்தின் உண்மைக் காரணம் தெரியவரும் நிலையில் இப்படியொரு கருத்தை ஆஸம் கான் முன்வைத்தது வருத்தத்துக்குரியது.

கடந்த இரண்டு வார காலத்துக்கும் மேலாக வடஇந்தியாவை மையம் கொண்டிருக்கும் புயலாக மாறியுள்ளது பத்மாவதி. ராஜபுத்திர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் வரலாற்று கருத்துகள் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாக ராஜபுத்திர வம்சாவளிகளும், இந்துத்துவா அமைப்புகளும் போராட்டத்திலும், கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

படத்தின் கதை குறித்து படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தனது விளக்கத்தைத் தெரிவித்திருந்தாலும் அதை ஏற்க மறுப்பதோடு அவருக்கும், பத்மாவதியாக நடித்த தீபிகா படுகோனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளது என்று கூறி பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் படத்துக்குத் தடை விதித்துள்ளது. வரலாற்றைத் திரிக்கும்படியாக படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கருத்து வெளியாவதால் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஹரியானா, குஜராத், கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் படத்தால் பரவலாகப் பிரச்னை உருவாகியுள்ளது. இந்தப் பிரச்னையை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாநில முதல்வரும் பேசிவரும் நிலையில், எத்தனை சாதாரண காரணத்துக்காக இவ்வளவு பெரிய போராட்டம் என்பதைக் கடைசியில் பார்க்கலாம். முதலில் இதற்கான ரியாக்ஷன் என்னவென்று பார்ப்போம்.

‘படத்தின் கதை உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கற்பனையான கதையா என்பதை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்தப் படத்தை திரையிட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். பன்சாலிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது எப்படி மனிதத்தன்மை அற்ற செயலோ, அதேபோன்று மக்களின் உணர்வைப் புண்படுத்துவதும் பன்சாலியின் கருத்தும் மனிதத்தன்மையற்ற செயலே’ என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

“இன்று படத்துக்கும் படக்குழுவினருக்கும் எதிராக வீதிகளில் இறங்கியுள்ள ராஜபுத்திரர்கள் மற்றும் ராஜ்வாடாக்கள் ஏன் அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடவில்லை?” என்று பாடலாசிரியர் ஜாவித் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்து கூறிய பாஜக தலைவர் சுராஜ் பால் அமு மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தீபிகாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூரில் உள்ள தீபிகாவின் பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாகப் படம் வெளியாவதற்கு முன்பே படத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆஸம் கான், “வரலாற்று கதைகளில் உண்மைகள் இருக்கும் பட்சத்தில் அதை இஸ்லாமிய சமூகத்தினர் பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள். முகல்-ஏ-ஆஸம் படம் அதற்குச் சிறந்த உதாரணம். அனார்கலி மற்றும் சலீமின் காதலை மையப்படுத்திய இந்தப் படம் வரலாற்று உண்மையை கூறிய படம் அதனால் அந்த படத்துக்கு எந்த இஸ்லாமியர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நேற்று தொடங்கிய கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட திரைப் பிரபலங்கள் பலரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பெரும்பாலானோர் பதிலளிக்காமல் சென்றனர். இந்தச் சூழலில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பலர் அம்மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படியெல்லாம் பலவித ட்விஸ்டுகளுடன் சென்றுகொண்டிருக்கும் பத்மாவதி திரைப்படத்தின் பிரச்னை எங்கிருந்து தொடங்கியது என்று FirstPost இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கல்வி தெரிவித்துள்ளார்.

படம் தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற மீடியா சந்திப்பில் ரன்வீர் சிங்கிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். உங்களது வில்லன் ரோல் எந்த மாதிரியாக இருக்குமென்று. அதற்கு ரன்வீர், ‘தீபிகாவுடன் இரண்டு நெருக்கமான காட்சி வைத்தால் இரண்டு மடங்கு வில்லத்தனத்தை என்னால் காட்ட முடியும்’ என்று ரன்வீர் கூறினார். பத்மாவதி ராணியாக நடிக்கும் தீபிகாவுடன், கில்ஜியாக நடிக்கும் ரன்வீருக்கு எப்படி காட்சி வைக்க முடியும்? எனவே, பன்சாலிக்கும் ரன்வீருக்கும் இதுகுறித்து விளக்கம் கேட்டு இ-மெயில், கடிதம் அனுப்பினோம். ஆனால், ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடத்தியவரை எந்தப் பதிலும் இல்லை. மும்பை சென்றபிறகு எங்களை வரச் சொன்னார்கள். எங்களையெல்லாம் சந்திக்க அவர்களுக்கு நேரம் இருக்காதென எங்களுக்குத் தெரியும். நாங்கள் என்ன அத்தனைப் பெரிய ஆட்களா? எனவே தான் மும்பை சென்று அவர்களை சந்திக்கவில்லை. நாங்கள் அழைத்தபோதே சந்தித்திருந்தால் அந்த பிரச்னையை அங்கேயே முடித்திருக்கலாம். ஆனால், எங்களை மதிக்கவில்லை. இப்போது இங்கே வந்து நிற்கிறது. இதனால் யாருக்கு நஷ்டம்? என்று FirstPost-இன் சமூக வலைதள லைவ் வீடியோவில் பேசியிருக்கிறார் கல்வி.

கல்வி சொல்லும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது கடந்த ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் பத்மாவதி ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அரங்கத்தைச் சூரையாடி, பன்சாலியை தாக்கியவர்களுக்கும் தற்போதைய போராட்டக்காரர்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த பத்மாவதி பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் தன்னை மட்டம் தட்டியதால், தான் யாரெனக் காட்டும் பழிவாங்கும் குணம். தங்களது சுய பெருமைக்கான விளம்பரத்துக்கு பத்மாவதியைப் பயன்படுத்திக் கொண்டதுதான் மிச்சம்.

இவ்வளவையும் சொல்லிவிட்டு, எங்களால் பத்மாவதி படத்துக்கு இலவச விளம்பரம்தான் கிடைத்திருக்கிறதே தவிர, படத்தை நாங்கள் நாசம் செய்யவில்லையே என்றும் கல்வி குறிப்பிட்டிருக்கிறார். ஜெய்ப்பூரின் ‘ராஜா’ பரம்பரை கலைத்துறைக்குச் செய்யும் சேவையாக எடுத்துக்கொண்டு இந்தச் சச்சரவை விரைவில் முடித்து வைக்குமாறு பன்சாலியிடம்தான் முறையிட வேண்டும்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon