மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சிறப்புப் பேட்டி: அருண் கிருஷ்ணமூர்த்தி: வறட்சியைப் போக்க என்ன வழி?

சிறப்புப் பேட்டி: அருண் கிருஷ்ணமூர்த்தி: வறட்சியைப் போக்க என்ன வழி?

ஆரோன், வித்யா

தமிழகத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று குடிநீர் பிரச்னை. அதிலும் அதிகமாகப் பாதிப்படையும் மாவட்டம் சென்னை.

சென்னையில் கோடைக்காலத்தில் குடிதண்ணீருக்காகக் காத்திருக்கும் மக்களையும், மழைக்காலத்தில் வீட்டுக்குள் வெள்ளம்வந்து கடும் அவதிப்படும் மக்களையும் பார்க்கிறோம். ஆனால், மழைக்காலத்தில் அதிக மழை கிடைத்தும் நம்மால் அதை முழுமையாகச் சேமிக்க முடியாத நிலையில்தான் உள்ளோம். இதற்குக் காரணம் ஏரிகள், குளங்கள் அழிந்ததே.

இந்தக் குளங்களையும் ஏரிகளையும் மீட்க முடியுமா? மிச்சமிருக்கும் நீர்நிலைகளைக் காப்பாற்ற முடியுமா?

இதுதான் அருண் கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி, கவலை, வேலை, வாழ்வு எல்லாமே...

யார் இந்த அருண் கிருஷ்ணமூர்த்தி?

கூகுள் மாதிரி மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் கனவு. ஆனால், கூகுள் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இயற்கை ஆர்வத்துடன், சுற்றுச்சூழலைக் காக்க முழு நேரமும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவருபவர் இவர். அழிந்துவரும் ஏரிகளை மீட்டெடுக்கும் நோக்கத்தில், சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார் 30 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி.

ஏரிகளை மறுசீரமைப்பு செய்ய, யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தன்னார்வலர்களைத் திரட்டித் தன் சொந்த முயற்சியால் இதைச் செய்துவருகிறார்.

அண்மையில் இவருடைய இந்த முயற்சிகளைப் பாராட்டி, ஸ்விட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனம் விருது ஒன்றையும் கொடுத்து இவரைக் கௌரவித்துள்ளது. பரிசுத் தொகையைப் பணமாகத் தருவதற்குப் பதிலாக, சென்னையில் இருக்கும் கீழ்க்கட்டளை ஏரியை மறுசீரமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று இவர் கேட்டுக்கொண்டார். அந்த நிறுவனமும் அதற்குச் சம்மதம் தெரிவித்து உதவிகள் செய்தது.

அரசாங்கமே ஏரி, குளங்களை மீட்டெடுக்கச் சரியான நடவடிக்கை எடுக்காத நிலையில், இதற்கெனவே Environmentalist Foundation of India என்ற அமைப்பை உருவாக்கிச் சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்த நாளன்று தொடங்கிய மையம் விசில் என்னும் இயக்கத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்திருக்கிறார்கள். பொதுமக்களின் குறைகளைக் கவனித்து ஆவனச் செய்யும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள். அந்தக் குழுவிலும் அருண் இடம்பெற்றுள்ளார். சென்னையின் நீர்நிலைகள் பற்றி அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...

ஆந்திராதான் பூர்வீகம். வளர்ந்தது எல்லாம் தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூரில். என்னுடைய அப்பா செல்ல சுப்பிரமணியன் இன்ஷூரன்ஸ் நிறுவன வளர்ச்சி அதிகாரியாக இருக்கிறார். அம்மா ரூமா பேராசிரியை.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மைக்ரோ பயாலஜியில் பட்டப்படிப்பை முடித்தேன். ஐ.ஐ.எம்.சியில் பட்ட மேற்படிப்பை முடித்ததும் கூகுள் நிறுவனத்தில் நல்ல வேலைக் கிடைத்தது. கூகுளில் வேலை பார்க்கும்போதே நண்பர்களோடு இணைந்து, ஆந்திராவில் இருக்கிற குருநாதன் செருவு என்கிற ஏரியை நண்பர்களின் உதவியோடு சுத்தம் செய்து முடித்தோம்.

சிறு வயது முதலே பறவைகள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். பறவைகளுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் ஏரிகளை மீட்கும் எண்ணம் எழுந்தது. கூகுள் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், இயற்கைப் பணிக்காக என்னுடைய வேலையை விட்டுவிட்டேன்.

உங்களுடன் எத்தனை தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள்?

நாங்கள் 2011ஆம் ஆண்டு E.F.I. என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கினோம். எங்களுடைய அமைப்பில் 21 பேர் முழுநேரத் தன்னார்வலராகப் பணியாற்றி வருகின்றனர். இதை நிர்வகிப்பவர்கள், பங்கு பெறுபவர்கள், உரிமையாளர்கள் எல்லாமே மாணவர்கள், தன்னார்வலர்கள் மட்டும்தான். இதுவரை 900 பள்ளி மாணவர்கள் இணைந்து, ஏரிகள் மறுசீரமைப்புக்கு உதவி செய்துள்ளனர்.

நாங்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களிலும், இலங்கையில் உள்ள மூன்று மாகாணங்களிலும் எங்களுடைய பணியைச் செய்துவருகிறோம். பல்லுயிர்களும் வளம் பெற வேண்டும். வறண்ட வருங்காலம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுகூடி நீர் நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். இதுவே எங்கள் நோக்கம்.

அமைப்பை நடத்துவதற்கு ஸ்பான்சர்கள் இருக்கிறார்களா?

எங்கள் நிறுவனத்துக்கு ஸ்பான்சர்கள் கிடையாது. நாங்கள் உதவி என்று கைநீட்டி யாரிடமும் காசு கேட்க மாட்டோம். கொடுத்தாலும் வாங்கவும் மாட்டோம். அதனால், என் செலவுகளுக்காகவும் இந்த அமைப்பைத் தொடர்ந்து நடத்தவும் ஒரு தகவல்தொடர்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். இந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கிற வருவாயில் பாதியைச் சமூக சேவைக்கும் மீதியை எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பிரித்துக்கொள்கிறேன்.

இது போன்ற முயற்சியைத் தொடங்க உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது? எவ்வாறு இதை ஆரம்பித்தீர்கள்?

கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து வளர்ந்தவன் நான். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரிதான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில்படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.

இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னும் முளைவிட்டது. அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாது என்று தோன்றியது. வேலையை விட்டுவிட்டு நண்பர்களின் உதவியோடு இதைச் செய்கிறேன்.

கமல்ஹாசனின் ‘மையம் விசில்’அமைப்புக்கும், EFI அமைப்புக்கும் உள்ள தொடர்பு...

தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களில் ஒருவர் கமல். இவர் இயற்கை ஆர்வம்கொண்டவர். எங்களுடைய நற்பணிகளையும் இயற்கை ஆர்வத்தையும் கண்டு, 2014ஆம் ஆண்டிலிருந்து எங்களுடன் சேர்ந்து களப்பணிக்கு உதவி செய்துவருகிறார். மையம் விசில் என்ற அவரின் அமைப்புடன் இணைந்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயன்று வருகிறோம். பல சமூக இயக்கங்களைப் போலவே அவரது நற்பணி இயக்கமும் செயல்பட்டுவருகிறது.

ஏரிகள் அழிந்துவரக் காரணம்?

நம் முன்னோர்கள் நமக்கென்று விட்டுச்சென்ற அரியப் பொக்கிஷம் நீராதாரங்கள். இதனுடைய அருமையைப் புரிந்துகொள்ளாத மக்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றி வருகின்றனர்.

மீதி உள்ள ஏரிகளில் மக்காத கழிவுகளையும் தொழிற்சாலைக் கழிவுகளையும் கலக்க வைத்து, ஏரிகளை அழித்துவருகின்றனர். இதனால், பல்வேறு வகையான நோய்கள், வறட்சி, மண் மாசுபாடு, நீர் மாசுபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஏரிகளைச் சரியான முறையில் தூர் வராமல், முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் பருவநிலை மாற்றத்தின் தாக்கமும் ஏற்படுகிறது. இதனால், நாம் இயற்கை சார்ந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

உங்கள் இயக்கம் ஏதேனும் ஏரியை மீட்டெடுத்திருக்கிறதா?

கடந்த பத்தாண்டுகளில் சென்னை, கோவை, ஹைதராபாத், டெல்லி, புதுச்சேரி ஆகிய இடங்களில் 83 நீர் நிலைகளை மீட்டெடுத்து அவற்றுக்கு உயிரூட்டியுள்ளோம். அதிலும், முக்கியமாகச் சென்னையில் உள்ள கீழ்கட்டளை ஏரி, மாடம்பாக்கம் ஏரி, முடிச்சூர், திருநீர்மலை, பெரும்பாக்கம், விழிஞ்சியம்பக்கம் ஏரி, கரசங்கால் ஏரி, முடிச்சூரில் உள்ள நான்கு குளங்கள், கோவை நகரில் உள்ள செல்வ சிந்தாமணி குளம், திருவையாற்றில் உள்ள நந்தி குளம், திருநெல்வேலியில் உள்ள பேட்டை குளம், வடலூர் ஐயன் ஏரி, கோவையில் உள்ள முத்தண்ணன் குளம் போன்ற பல்வேறு நீராதாரங்களைச் சீரமைத்துள்ளோம்.

எங்களுடைய அமைப்பினர் அனைவரும் வாரம் தவறாமல், ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக அரசிடம் உரிய அனுமதி பெற்று நண்பர்களுடன் இணைந்து இந்தத் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ஏரிகளை மீட்க இனி என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?

இயற்கை ஆர்வம்கொண்ட பலர் ஒன்றுகூடி, மீட்க வேண்டிய ஏரிகள், குளங்கள் குறித்து ஆலோசனை செய்து, களத்தில் இறங்கி ஏரிகளைச் சுத்தம் செய்துவருகிறோம்.

பொது மக்களிடையே நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதே எங்களுடைய முதல் குறிக்கோள். இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் சென்று நீர்ப் பாதுகாப்புக் கருத்தரங்குகளை நடத்துகிறோம். சுவர் ஓவியங்கள், ஆவணப் படங்கள், தெருக்கூத்து எனப் பல முயற்சிகள் மூலம் மக்களுக்கு ஏரிகளை மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்.

நீர் ஆதாரங்களைப் பாதுகாத்து மீட்டெடுக்க மக்களிடம் ஆர்வம் உள்ளது. அவர்கள் தகுந்த முயற்சியுடன் களப்பணியில் ஈடுபட்டால் விரைவில் ஏரிகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

அடுத்த பத்தாண்டுகளில் 150 நீர் நிலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்போடு நீர்நிலைகளைக் காப்பாற்றிவருகிறோம்.

நீர்நிலைகளை மீட்டெடுக்க அவசியமானது என்று நீங்கள் நினைப்பது எது?

நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், நீரினைச் சேமிக்கவும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த அனைவரும் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். நம்முடைய எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று மழைநீர் சேகரிப்புத் திட்டம்.

2015இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பற்றி நீங்கள் அரசுக்குக் கொடுத்த சர்வேயின் முடிவுக்கு அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைத்ததா?

கிடைத்தது. மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் எங்களுடன் சேர்ந்து களப்பணியில் இறங்கி, ஆர்வத்துடனும் எங்களுக்கு நல்ல ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுத்தனர். இதே வேகத்துடன் எப்போதும் ஏரிகளையும் குளங்களையும் மீட்க இந்தக் கூட்டு முயற்சியோடு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஏரிகளை மீட்க, தனிநபர், அரசு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் என்னென்ன?

நாம் வாழும் பகுதியில் உள்ள நீர்நிலைகள் பற்றி நாம் அறிந்துகொள்வது அத்தியாவசியத் தேவை. நாம் பயன்படுத்தும், கழிவுகளின் தரம் மற்றும் அளவு பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். நம் நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் அரசுடன் ஒன்று கூடிப் பணியாற்ற வேண்டும். நம் அருகில் உள்ள ஏரிகளில் நாம் அசுத்தம் செய்யாமல் இருந்தால் போதும். ஆக்கிரமிப்புகளை அகற்றவும் புது ஆக்கிரமிப்புகள் வராமல் இருக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சட்டத்துக்குட்பட்டு நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்.

இதுபோன்ற வேலைகளில் பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறீர்களா?

பிரச்னைகள் வந்ததில்லை என்று சொல்ல மாட்டேன். அதையெல்லாம் நான் தடைகளாக நினைப்பதில்லை. பாடங்களாக எடுத்துக்கொள்வேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு. பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று இதைப் பற்றிப் பேசுகிறேன். தன்னார்வலர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சமூகத்துக்கு நீங்கள் விடுக்கும் வேண்டுகோள்?

நமது நீர், நமது உரிமை, நமது கடமை. இந்த நீராதாரங்களைப் பாதுகாக்க வேறொருவர் வருவார் என்று நாம் காத்துக்கொண்டிருந்தால் நமக்கு வறண்ட வருங்காலம் நிச்சயம். ஓர் ஏரியைச் சுத்தம் செய்வதென்பது அங்கிருக்கிற குப்பைகளை எடுத்துப் போடுவது மட்டுமே அல்ல. ஏரியைச் சுற்றி வேலி அமைத்தல், தூர்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்றவை. முறையான அரசு அனுமதி பெற்று அறிவியல்பூர்வமான, உண்மையான களப்பணியில் அனைவரும் ஈடுபட வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon