மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

பாமகவில் இணைந்தார் மணிகண்டன்

பாமகவில் இணைந்தார் மணிகண்டன்

தமிழகம் எங்கும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி முடித்த கையோடு அடுத்த வாரம் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி மின்னம்பலம் மொபைல் பத்திரிகையில், நாம் வெளியிட்டிருந்த கொங்கு மீது கவனம் குவிக்கும் ராமதாஸ் என்ற செய்தி இப்போது உண்மையாகியிருக்கிறது.

கொங்கு மண்டலத்தில் பாமகவைப் பலப்படுத்தும் பொருட்டு விவசாயிகள் அமைப்பை வெகுகாலமாக நடத்திவந்த பொங்கலூர் மணிகண்டனை பாமகவில் இணைத்து அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவியும் கொடுத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

நமது செய்தி வெளிவந்த சில தினங்களில் பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணியைச் சந்தித்த பொங்கலூர் மணிகண்டன், நேற்று (நவம்பர் 21) தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸைச் சந்தித்து முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து பாமகவின் மாநிலத் துணைத் தலைவராக மணிகண்டனை நியமித்து டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் அறிவித்தார் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி.

இந்த நிலையில் நாம் பொங்கலூர் மணிகண்டனிடம் பேசினோம்.

“கொங்கு மண்டலத்தின் ஆற்றல்மிகு தலைவர்களான நாராயணசாமி நாயுடு, கோவை செழியன் ஆகியோரின் அருகே இருந்து அவர்களிடம் அரசியல் பயின்றவன் நான். பிற்பாடு நம்மாழ்வார் அவர்களின் வேளாண் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முழுக்க முழுக்க விவசாயிகளின் நலன்களுக்காக இயங்கி வந்தேன்.

இந்த நிலையில் இப்போது தமிழகத்துக்கு அவசியத் தேவை பாமகவே என்பதை உணர்ந்து அண்ணன் ஜி.கே.மணி அவர்கள் முன்னிலையில் டாக்டரைச் சந்தித்து முறைப்படி பாமகவில் இணைந்தேன். எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு மிக உயர்ந்தது. வரும் டிசம்பர் மாதம் கோவையில் இணைப்பு விழாவைப் பெரிதாக நடத்த இருக்கிறோம்.

விரைவில் அன்புமணியைத் தமிழக முதல்வராக்க சூளுரைத்து வாகனப் பரப்புரைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பொள்ளாச்சியில் தொடங்கும் இந்தப் பயணத்தின் இடையே அன்புமணியும் பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார்” என்றார் மணிகண்டன்.

கொங்குவில் பாமகவின் பாய்ச்சல் இனி அதிகரிக்கும் என்று நம்பலாம்!

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon